4 ஆண்டுகளாக மாறவில்லை தீபாவளி போனஸ் தொகை இந்த ஆண்டாவது உயருமா?

பள்ளிபாளையம், செப்.17: பள்ளிபாளையத்தில், 4 ஆண்டுகளாக உயர்த்தப்படாத தீபாவளி போனஸ் தொகை, இந்த ஆண்டாவது உயர்த்தி வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பில் விசைத்தறி தொழிலாளர்கள் காத்திருக்கின்றனர்.

பள்ளிபாளையம் விசைத்தறி தொழிலாளர்களுக்கு, 2 ஆண்டுக்கு ஒருமுறை தீபாவளி பண்டிகையின் போது போனஸ் தொகையை நிர்ணயம் செய்வது வழக்கம். கடந்த 2015ம் ஆண்டில் நடந்த பேச்சுவார்த்தையில், 9 சதவீதம் தீபாவளி போனஸ் வழங்குவதென முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து 2017ல் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ஜவுளித்தொழில் நிலவரம் கவலைக்கிடமாக இருப்பதால், கடந்த ஆண்டுகளில் வழங்கப்பட்ட அதே தொகையை, அடுத்து வரும் இரண்டு ஆண்டுகளுக்கு வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டது. இதை தொழிற்சங்கத்தினரும் ஏற்று கையெழுத்திட்டனர். இதனிடையே, கடந்த 5 ஆண்டுகளாக நெசவுக்கான கூலியும் உயர்த்தப்படவில்லை. வேலை நிறுத்த போராட்டம் காரணமாக தொழிலாளர்களுக்கு உயர்த்தப்பட்ட கூலியையும், விசைத்தறி கூடங்கள் முழுமையாக அமல்படுத்தவில்லை.

தற்போது, கடுமையான விலைவாசி உயர்வு, கல்வி கட்டணம், வீட்டு வாடகை, காப்பீடு, தொழில்வரி, குடிநீர் கட்டணம் என பலமுனைகளில் செலவினங்கள் பலமடங்காக உயர்ந்துள்ளது. விலைவாசி பல மடங்கு உயர்ந்த போதிலும், விசைத்தறி தொழிலாளர்களுக்கான கூலியோ, போனஸ் தொகையோ உயரவேயில்லை. இதனால் நெசவுத்தொழிலாளர்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். கந்து வட்டி, மைக்ரோ பைனான்ஸ் என பல தரப்பிலும் கடன் வாங்கி, அதை கட்டமுடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.  இது போன்ற நெருக்கடியான நிலையில், இந்த ஆண்டு நடத்தப்படும் பேச்சுவார்த்தையில் போனஸ் தொகை கூடுதலாக நிர்ணயம் செய்யப்படுமா? என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். ஆனால், தொழிற்சங்கத்தினர் இதுவரை போனஸ் தொடர்பான கோரிக்கையை கையில் எடுக்கவில்லை. வரும் 26ம் தேதி நாமக்கல் மாவட்ட சிஐடியூ விசைத்தறி தொழிலாளர்கள் சம்மேளன பேரவை கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில், விசைத்தறி தொழிலாளர்களுக்கு புதிய போனஸ் கோரிக்கை எழுப்பப்படுமென தெரிகிறது.

Related Stories: