ராசிபுரம் அருகே 7 தலைமுறை வாரிசுகள் சங்கமிப்பு

ராசிபுரம், ஆக.20: ராசிபுரத்தில்  நடைபெற்ற ஏழு தலைமுறையினரின்  வாரிசுகள் சங்கமிக்கும் விழாவில், ஒரே  குடும்பத்தை சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன், கூட்டு குடும்ப உறவை  பலப்படுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வையும்  ஏற்படுத்தியது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள  தொ.ஜேடர்பாளையத்தை சேர்ந்த முத்துநல்லியப்பன். விவசாய குடும்பத்தை சேர்ந்த  இவர் ஓய்வு பெற்ற டிஎஸ்பி ஆவார். ஓய்வு பெற்ற பின்னர், கூட்டுக்குடும்ப முறையின் அவசியம்  குறித்து, இன்றைய தலைமுறை புரிந்து கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில், தனது  7 தலைமுறைகளை தேடும் பணியில் ஈடுபட்டார். இதனையடுத்து, கடந்த 199  வருடங்களுக்கு முன்பு தொடங்கிய முப்பாட்டன் காலத்து வாரிசுகள் முதல்,  தற்போதைய டிஜிட்டல் கால வரையிலான தலைமுறை உறவுகளை ஒருங்கிணைக்கும்  முயற்சி செய்தார்.

இதன் அடிப்படையில், முதல் தலைமுறை 1824-ல் தொடங்கியுள்ளது. இதில் 1824 முதல்  தற்போது வரையிலான குடும்ப வாரிசுகள் ஒன்றிணைந்து திருமண மண்படத்தில் கூடி,  சங்கமிக்கும் விழாவை நேற்று நடத்தினார். இதில் முன்னாள் எஸ்பிக்கள் அசோக்குமார்,  கலியமூர்த்தி, எழுத்தாளர் லேனா தமிழ்வாணன், முன்னாள் அமைச்சர் ராமசாமி,  நாமக்கல் எம்பி சின்ராஜ், முன்னாள் எம்பிக்கள் சுந்தரம், ராமலிங்கம், முன்னாள் எம்எல்ஏ ராமசாமி  உள்ளிட்ட பலர் பங்கேற்றுப் பேசினர். இந்த விழாவில், முதியவர்கள் முதல்  தற்போதைய தலைமுறை குழந்தைகள் வரை ஒன்று கூடி பேசி மகிழ்ந்து, கலைநிகழ்ச்சிகள் நடத்தி, உணவருந்தி மகிழ்ந்தனர். இதில் வெளிநாடுகளில் வசித்து  வரும் வாரிசுகளும் பங்கேற்றனர். இந்த வாரிசுகளை முத்துநல்லியப்பன் உடன்  பணிபுரிந்த காவல் துறையினர், உறவினர்கள், முக்கிய பிரமுகர்கள் பலர்  பங்கேற்று வாழ்த்தினர். மேலும் முதியவர்களிடம் வரிசையில் நின்று  வாரிசுகள் ஆசி பெற்றனர்.

 புதியதாக துவங்கப்பட்டுள்ள அறக்கட்டளை சார்பில், பலருக்கு கல்வி  உதவித்தொகையும் வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் வாரிசுகள் இதேபோல் ஒன்று  கூடுவது என முடிவு செய்துள்ளனர். இந்த விழா, தமிழர் கலாச்சாரம், பண்பாடு,  கூட்டுக் குடும்ப முறை, கிராம வாழ்க்கை போன்றவற்றை இன்றைய தலைமுறையினருக்கு  தெரிவிக்க வேண்டும் என்ற அடிப்படையிலும், ஒருவரை  ஒருவர் அறிமுகம் செய்து கொண்டு, உறவுகளை பலப்படுத்தும் வாய்ப்பாகவும்  அமைந்தது என முத்து நல்லியப்பன் தெரிவித்தார்.

Related Stories: