ஈரோட்டில் ஆகஸ்ட் 22ம் தேதி முதல் ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம்

நாமக்கல், ஜூலை 24: இந்திய ராணுவத்திற்கு ஆள் சேர்ப்பு முகாம் ஈரோட்டில் தொடங்க உள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று நாமக்கல் கலெக்டர் ஆசியாமரியம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு வ.ஊ.சி. விளையாட்டு மைதானத்தில் வரும் ஆகஸ்ட் 22ம் தேதி முதல் செப்டம்பர் 2ம் தேதி வரை ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம் நடத்த உள்ளது. இதில் கோயம்புத்தூர், தர்மபுரி,  திண்டுக்கல், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கிருஷ்ணகிரி, மதுரை, தேனி மற்றும் சேலம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்கள் மட்டும் கலந்து கொள்ள வேண்டும். 23 வயதிற்குட்பட்ட தகுதியுடைய இளைஞர்கள் www.joinindianarmy.nic.in   என்ற இணையதளம் மூலம், 7ம் தேதி வரை சோல்ஜர் ஜென்ரல் டியூட்டி, சோல்ஜர் டெக்னிகல், சோல்ஜர் டெக்னிகல் அம்யுனிசன் ஏவியேசன், சோல்ஜர் டெக்னிகல் நர்சிங் அசிஸ்டன்ட், சோல்ஜர் கிளார்க்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல், சோல்ஜர் டிரேட்ஸ்மேன் (10ம் வகுப்பு தேர்ச்சி), சோல்ஜர் டிரேட்ஸ்மேன் (8ம் வகுப்பு தேர்ச்சி) ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பதாரர்களுக்கு வரும் 9ம் தேதிக்கு பிறகு ஆன்லைனில் அனுமதி சீட்டு வழங்கப்படும். அனுமதி சீட்டில் குறிப்பிட்ட ஆவணங்களை விண்ணப்பதாரர்கள் ஆட்சேர்ப்பு முகாமிற்கு எடுத்துச் செல்ல வேண்டும். மேலும் கூடுதல் விபரங்களுக்கு உதவி இயக்குநர் முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தினை நேரில் அணுகலாம். இவ்வாறு கலெக்டர் ஆசியாமரியம் தெரிவித்துள்ளார்.

Related Stories: