நைனாமலை அடிவாரத்தில் மண் வெட்டி கடத்தல் பொக்லைன், லாரியை சிறை பிடித்து மக்கள் போராட்டம்

சேந்தமங்கலம், ஜூலை 24: நைனாமலை அடிவாரத்தில் மண் வெட்டி கடத்தப்படுவதை கண்டித்து, அப்பகுதி மக்கள் நேற்று லாரி மற்றும் பொக்லைன் இயந்திரத்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம்  அடுத்துள்ள இருளப்பட்டி கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தின் அருகே, நைனாமலை அடிவாரப்பகுதி அமைந்துள்ளது. இங்கு ஏரளமான அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இந்நிலங்களில், கடந்த 3 மாதமாக அனுமதியின்றி மண் வெட்டி கடத்தப்பட்டு வருகிறது.  மண்ணை டிப்பர் லாரிகள் மூலம் கொண்டு செல்லும் போது, சாலைகள் அதிகம் சேமடைகிறது. இதனால், கிராம மக்கள் வாகனங்களில் சென்றுவர சிரமப்படுகின்றனர். இதுகுறித்து வருவாய் துறையினரிடம் பல முறை புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், நேற்று மாலை நைனாமலை அடிவாரப் பகுதியில் இருந்து பொக்லைன் மூலம் மண் வெட்டி டிப்பர் லாரிகளில் கடத்தப் படுவதாக அப்பகுதி மக்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து கிராம மக்கள் 50க்கும் மேற்பட்டோர் திரண்டு அடிவாரப் பகுதிக்கு வந்தனர். பொதுமக்கள் வருவதை அறிந்த மண் கடத்தலில் ஈடுபட்டவர்கள், லாரியை எடுத்துக்கொண்டு தப்பிச்சென்றனர். இதில் ஒரு லாரி மற்றும் பொக்லைன் இயந்திரம் சிக்கிக்கொண்டது. இதையடுத்து அவற்றை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. இதுகுறித்து தகவலின் பேரில் அங்கு வந்த சேந்தமங்கலம் எஸ்ஐ கங்காதரன் மற்றும் போலீசார்,  போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:  நைனாமலை அடிவாரத்தில், கடந்த 3 மாதங்களாக வருவாய்த்துறை அதிகாரிகள்  ஆதரவுடன் மண் வெட்டி கடத்தப்படுவது வாடிக்கையாக உள்ளது. அவர்கள்  அமைச்சருக்கு நெருக்கமானவர்கள் என்பதால், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க  மறுக்கின்றனர் என்றனர். இதையடுத்து மண் வெட்டி கடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தார். இதனால் சமாதானமடைந்த பொதுமக்கள், போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்துசென்றனர்.

Related Stories: