மழை பெய்யாததால் தேயிலை மகசூல் பாதிப்பு தொழிற்சாலைகளில் உற்பத்தி குறைந்தது

மஞ்சூர், ஜூலை 23: மஞ்சூர் பகுதியில் மழை பெய்யாததால் தேயிலை மகசூல் கடுமையாக பாதித்து கூட்டுறவு, தனியார் தொழிற்சாலைகளில் உற்பத்தி மூன்றில் ஒருபங்காக குறைந்துள்ளது.மஞ்சூர் சுற்றியுள்ள குந்தா பகுதியில் போதிய மழை பொழிவு இல்லாததால் கடும் வறட்சி ஏற்பட்டு தேயிலை மகசூல் கடுமையாக பாதிக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி முதல் மே மாதம் வரை கடும் வறட்சி நிலவியதில் குந்தா பகுதியை சுற்றிலும் சுமார் ஆயிரம் ஏக்கர் பரப்பிலான

தேயிலை தோட்டங்கள் கருகிபோனது.  இந்நிலையில் கடந்த மாதத்தில் மிகவும் எதிர்பார்க்கப் பட்ட தென்மேற்கு பருவமழையும் அறவே பெய்யாமல் ஏமாற்றத்தை கொடுத்தது. இதனால் தேயிலை விவசாயம் ஸ்தம்பித்து விவசாயிகள் பொருளாதார ரீதியாக கடும் பாதிப்புகுள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. ஊட்டி உள்ளிட்ட சில

பகுதிகளில் கன மழை பெய்துள்ளது. ஆனால் குந்தா பகுதியில் மஞ்சூர், கிண்ணக்கொரை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் மட்டும் மழை பெய்யாமல் தொடர்ந்து வறட்சி நிலவி வருகிறது. மஞ்சூரில் உள்ள கூட்டுறவு தொழிற்சாலையில் தினசரி தேயிலை உற்பத்தி திறன் 18ஆயிரம் முதல் 20ஆயிரம் கிலோவாக உள்ள நிலையில் தற்போது நாளொன்றுக்கு வெறும் 5ஆயிரம் கிலோவிற்கும் குறைவாகவே பசுந்தேயிலை வரத்து காணப்படுகிறது.  கடந்தாண்டு இதே காலகட்டத்தில் சுமார் 40ஆயிரம் கிலோ வரை பசுந்தேயிலை வரத்து இருந்ததால் விவசாயிகளிடம் இருந்து பசுந்தேயிலை கொள்முதல் செய்வதில் ‘கோட்டா’ முறை அமல் படுத்தப்படது குறிப்பிடத் தக்கது. தற்போது பசுந்தேயிலை வரத்து மூன்றில் ஒரு பங்காக குறைந்துள்ளதால் தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்கும் பொருட்டு பிற இடங்களில் உள்ள தொழிற்சாலைகளிடம் இருந்து பசுந்தேயிலை தருவிக்கப்பட்டு தேயிலை உற்பத்தி மேற்கொள்ளப் பட்டு வருகிறது. இதேநிலை நீடித்தால் பொருளாதார ரீதியாக மஞ்சூர் பகுதி விவசாயிகள் கடும் பாதிப்பிற்குள்ளாவார்கள் எனவே வறட்சி காலத்திற்கான நிவாரண உதவி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: