கால்நடை அரசு மருத்துவமனைகளில் காட்சி பொருளான தண்ணீர் தொட்டிகள்

திருவள்ளூர், மே 22:  கால்நடை அரசு மருத்துவமனைகளில், பல லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட குடிநீர் தொட்டிகள் காட்சி பொருளாக மாறியுள்ளதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம். வீரபாண்டி ஒன்றியத்தில் வீரபாண்டி, நைனாம்பட்டி, உத்தமசோழபுரம், பூலாவரி, கடத்தூர், வேம்படிதாளம், மாரமங்கலத்துப்பட்டி, ராஜாபாளையம் மற்றும் சித்தர்கோயில் உள்ளிட்ட இடங்களில் அரசு கால்நடை மருத்துவமனைகள் செயல்பட்டு வருகிறது. சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது ஆடு, மாடு, நாய் மற்றும் கோழிகளுக்கு நோய் வந்தால், இந்த மருத்துவமனைகளுக்கு வந்து இலவசமாக சிகிச்சை பெற்றுச்செல்கின்றனர். அந்தவகையில், ஒவ்வொரு மருத்துவமனைக்கும் தினசரி 100க்கும் மேற்பட்டோர் வருகின்றனர்.

இந்நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு வரப்படும் கால்நடைகள் தாகம் தணிப்பதற்காக அருகிலேயே பல லட்சம் மதிப்பில் குடிநீர் தொட்டிகள் அமைக்கப்பட்டது. ஆனால், அனைத்து இடங்களிலும் தொட்டிகளில் தண்ணீர் இன்றி எப்போதும் காலியாகவே காணப்படுகிறது. பல இடங்களில் அவை குப்பை தொட்டிகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றனர்.இதனால், பல கிலோ மீட்டர் தொலைவில் இருந்து கால்நடைகளை ஓட்டி வரும் விவசாயிகள் அதிருப்திக்குள்ளாகி வருகின்றனர்.

 இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘நோய் பாதித்த கால்நடைகளை மருத்துவமனைக்கு ஓட்டி வருவதில் பெரும் சிரமம் உள்ளது. சிகிச்சை பெற்று வீடு திரும்புவதற்கு வெகு நேரம் பிடிக்கிறது.

இடைப்பட்ட நேரத்தில் ஆடு, மாடுகளுக்கு தண்ணீர் தேவை. கால்நடைகள் எப்போது தண்ணீர் குடிக்கும் என்பது அதனை வளர்த்து வருவோருக்குத்தான் தெரியும். எனவே, சரியான நேரத்தில் தண்ணீர் காட்ட வேண்டும். ஆனால், இதற்கென மருத்துவமனைகளில் கட்டப்பட்ட தொட்டிகள் தண்ணீரின்றி காட்சி பொருளாக காணப்படுகிறது. இதனால், அக்கம் பக்கம் வீடுகளில் தண்ணீர் வாங்கி ஆடு, மாடுகள் குடிக்க கொடுக்க வேண்டியுள்ளது. எனவே, காட்சி பொருளான தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி வைத்து, வாயில்லாத ஜீவன்களின் நலனில் அக்கறை காட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’என்றனர்.

Related Stories: