பரமத்திவேலூரில் அடுத்தடுத்து 4 இடங்களில் பெண்களிடம் சங்கிலி பறிப்பு

பரமத்திவேலூர், மார்ச் 19: பரமத்திவேலூர் பகுதியில் அடுத்தடுத்து 4 இடங்களில் பெண்களிடம் நடந்த சங்கிலி பறிப்பு சம்பவங்களால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

பரமத்திவேலூரை அடுத்துள்ள அணியார் பகுதியை சேர்ந்தவர் தங்கராசு மனைவி கலைச்செல்வி(50). இவர்,  கொளந்தாபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். நேற்று மாலை, பள்ளி முடிந்து ஸ்கூட்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். செக்குப்பட்டி செல்லும் சாலையில் வந்த போது, பைக்கில் பின்தொடர்ந்து வந்த 4 பேர், திடீரென அவரை வழிமறித்து மிரட்டி, அவர் அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு தப்பியோடி விட்டனர். இதேபோல், ராமகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். நேற்று, மனைவி செல்லம்மாளுடன் கீரம்பூரிலிருந்து தாத்திபாளையம் நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் பைக்கில் வந்த இருவர், செல்லம்மாள் அணிந்திருந்த 9.5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

நாமக்கல் அருகே, லத்துவாடியை சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி சுகந்தி(43) நேற்று மாலை வீட்டிற்கு ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார். அப்போது சுண்டக்காபாளையத்திலிருந்து கோனூர் செல்லும் சாலையில், பைக்கில் வந்த 4 பேர் அவர் மீது மோதுவது போல் சென்று இடித்தனர். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த போது, அவர் அணிந்திருந்த 8 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர். இதேபோல், புதுப்பாளையம் அருகே மகேஸ்வரி என்பவரது நகையையும் பைக் கொள்ளையர்கள் பறித்துச் சென்றுள்ளனர். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் காயமடைந்த அவரை, அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் மீட்டு நாமக்கல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் நல்லூர் மற்றும் பரமத்தி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து வழிப்பறி கொள்ளையர்களை தேடிவருகின்றனர். பரமத்திவேலூர் பகுதியில் நேற்று ஒரே நாளில் நான்கு இடங்களில் அடுத்தடுத்து நடந்த தொடர் சங்கிலி பறிப்பால் பெண்கள் பீதி அடைந்துள்ளனர்.

Related Stories: