கலெக்டர் அலுவலக வளாகத்தில் வாக்காளர் விழிப்புணர்வு கோலப்போட்டி

திருவள்ளூர், மார்ச் 15: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பாக மகளிர் சுயஉதவி குழுக்கள் மூலம் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில், வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியும், பணம் பெறாமல் நேர்மையாக வாக்களிக்க வேண்டும் என்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கோலப்போட்டிகள் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களிடையே நடத்தப்பட்டது.இந்த போட்டியில் 14 ஒன்றியங்களை சேர்ந்த 14 அணிகளில் மொத்தம் 226 மகளிர் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். தெருக்கூத்து கலைஞர்களை கொண்டு வாக்காளர் விழிப்புணர்வு நாடகங்கள் மூலம் வாக்களிப்பதன் அவசியம் மாவட்ட கலெக்டர் முன்னிலையில் பொதுமக்களிடையே ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லோகநாயகி,  மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர் வை.ஜெயகுமார் உட்பட பலர்  கலந்துகொண்டனர்.

பின்னர் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கூறுகையில், ‘‘வாக்காளர்களிடையே 100 சதவீதம் வாக்கு பதிவை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த தேர்தலில் 71 சதவிகிதம் வாக்கு பதிவு ஆகியுள்ளது. இதை 100 சதவிகிதம் அடைய செய்ய அனைத்து வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும், 1950 என்ற எண்ணை தொடர்பு கொண்டு வாக்காளர்கள் தங்களின் சந்தேகங்கள் மற்றும் புகார்களை தெரிவிக்கலாம். இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் சி-விஜில் என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதில், தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான புகார்களை எழுத்து மற்றும் புகைப்படம் மூலம் தெரிவிக்கலாம்’’ என்றார்.

Related Stories: