நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலையில் மேலும் 15 காசுகள் சரிவு

நாமக்கல், மார்ச் 15: நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று, மேலும் 15 காசுகள் சரிந்து 370 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாமக்கல் மண்டலத்தில் நேற்று, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் விலை நிர்ணய குழு கூட்டம் நடந்தது. இதில் பண்ணையாளர்கள் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முட்டை விலை மேலும் 15 காசுகள் குறைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஒரு முட்டையின் பண்ணை கொள்முதல் விலை தமிழகம் மற்றும் கேரளாவில் 370 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த விலைக்கு மேல், முட்டை விலை இனி குறையாது என முடிவு செய்யப்பட்டது.கோடை வெப்பத்தின் காரணமாக, முட்டை விற்பனை தமிழகம் மற்றும் கேரளாவில் தொடர்ந்து குறைந்து வருகிறது. அதனால் முட்டையின் கொள்முதல் விலையும் தொடர்ந்து குறைக்கப்பட்டு வந்தது.தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்யும் விலையில் இருந்து, பண்ணையாளர்கள் அதிகமாக விலையை குறைத்து, வியாபாரிகளுக்கு முட்டை விற்பனை செய்து வந்தனர். இதை தடுக்கும் வகையில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு முட்டை விலையை குறைத்துள்ளது. கடந்த இரு வாரங்களில் முட்டை விலை ஒரு ரூபாய் வரை குறைந்துள்ளது. இதேபோல், முட்டைக்கோழி கிலோ ₹55 ஆகவும், கறிக்கோழி கிலோ ₹73 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.பிற மண்டலங்களில் முட்டை விலை விபரம் (காசுகளில்) நிலவரம்: சென்னை-375, ஐதராபாத்-335, விஜயவாடா-360, பர்வாலா-343, மும்பை-395, மைசூர்-370, பெங்களூரு-375, கொல்கத்தா-408, டில்லி-370, ஹோஸ்பெட்-340.

Related Stories: