2017-2018ம் ஆண்டுக்கான பயிர் காப்பீட்டு தொகையை ஒரே நேரத்தில் வழங்க வேண்டும் விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்தல்

கொள்ளிடம், மார்ச் 15: பயிர்க் காப்பீடுத் தொகையை அனைத்து விவசாயிகளுக்கும் ஒரே நேரத்தில் வழங்க விவசாயிகள் கூட்டமைப்பு சங்கம் வலியுறுத்தியுள்ளது.நாகை மாவட்டம் கொள்ளிடம் வட்டார விவசாயிகள் கூட்டமைப்பு சங்கத் தலைவர் சிவப்பிரகாசம்பிள்ளை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கடந்த 2016-17 ஆம் ஆண்டுக்கான பயிர்க்காப்பீடுத்தொகை இதுவரை விவசாயிகளுக்கு முழுமையாக வழங்கவில்லை. மீதமுள்ள தொகையை உடனே விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். இந்நிலையில் 2017-18ம் ஆண்டுக்கான காப்பீட்டுத் தொகையை காப்பீட்டு நிறுவனம் கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிக்கு அனுப்பியிருக்கிறது. இந்த தொகையை விவசாயிகளுக்கு வழங்க விவசாயிகளின் சில கோரிக்கையினை ஏற்று வங்கி ஆணை பிறப்பிக்க கேட்டுக்கொள்கிறோம். இந்த காப்பீட்டுத் தொகையை அனைத்து விவசாயிகளுக்கும் ஒரே நேரத்தில் வழங்க வேண்டும். சென்ற வருடத்தில் விவசாயிகளுக்கு பகுதி பகுதியாக வழங்கி மீதமுள்ள தொகை வழங்காமல் நிலுவையில் உள்ளது. எனவே பகுதி பகுதியாக வழங்குவதை தவிர்த்து ஒரே நேரத்தில் வழங்க வேண்டும். காப்பீட்டுத் தொகைக்கான விகிதாச்சாரங்களை விளம்பர பலகையில் தெரிவிக்க வேண்டும்.

ஒவ்வொரு விவசாயிக்கும் எவ்வளவு காப்பீட்டுத்தொகை என்பதையும், எந்தத் தேதியில் வழங்கப்படுகிறது என்பதையும் அனைத்து விவசாயிகளும் தெரிந்து கொள்ளும்படி ஒவ்வொருவருக்கும் அஞ்சல் அட்டை மூலமோ அல்லது போன் மூலமோ தகவல் தெரிவிக்க வேண்டும். கொள்ளிடம் ஒன்றிய எல்லைக்குட்பட்ட கிராமங்களின் காப்பீட்டுத் தொகையின் விகிதாச்சார பட்டியலை விவசாயிகளுக்கு வழங்க ஆணைப் பிறப்பிக்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட கலெக்டர், கூட்டுறவு துறையின் மாவட்ட பதிவாளர், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் ஆகியோர்களுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளதாகவும் அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories: