கரூர் பகுதியில் லாரிகளில் மணல் கடத்தல் அதிகரிப்பு

கரூர், மார்ச் 15: கரூர் பகுதியில் லாரிகளில் மணல் கடத்தல் அதிகரித்து வருகிறது.கரூர் மாவட்டத்தில் இயங்கி வந்த மணல் குவாரிகள் கோர்ட்டு உத்தரவின்படி மூடப்பட்டன. மணல் குவாரிகள் மூடப்பட்டாலும் லாரிகளில் அனுமதியின்றி மணல் எடுத்து செல்வது தொடர்கிறது. மாட்டு வண்டிகளில் மணல் எடுக்க விதிக்கப்பட்டிருந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளது. கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அமராவதி ஆற்றில் ஐந்து இடங்களில் மணல் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 105 ரூபாய் மாட்டு வண்டிக்கு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும் லாரிகளில் மணல் எடுத்து செல்வது அதிகரித்துள்ளது.

வழக்கமாக தினமும் ஒன்றிரண்டு லாரிகள் பிடிபடுவது வழக்கம். ஆனால் தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன்னர் வரை தினமும் 10க்கும் மேற்பட்ட லாரிகளில் அனுமதியின்றி மணலை எடுத்து சென்றனர். தற்போதும் அது தொடர்கிறது. திருச்சி மாவட்டத்தில் இருந்து வரும் மணல் லாரிகளும் கரூர் மாவட்டம் வழியாக சென்று கொண்டிருக்கிறது.மாட்டு வண்டிகளில் மணல் எடுப்பவர்கள் லாரிகளுக்கு மணல் கொடுக்கக்கூடாது, உள்ளூர் கட்டுமான பணிகளுக்கு மட்டுமே வண்டி மணலை கொடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: