வேட்பாளர்கள் விளம்பரத்திற்கு முன் அனுமதி பெற வலியுறுத்தல்

அரியலூர்,மார்ச்14: அரியலூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி, நாடாளுமன்ற பொதுத்தேர்தல் - 2019 தேதி அறிவித்து 10.03.2019 முதல் தேர்தல் நன்னடத்தை விதிமுறைகள் அமலுக்கு வரப்பெற்றுள்ளதை தொடர்ந்து, தினசரி நாளிதழ்கள், உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் அச்சக உரிமையாளர்களுடன் அரசியல் கட்சிகளின் விளம்பரம் வெளியிடுதல் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான விஜயலட்சுமி,   தலைமையில் நடைபெற்றது.கூட்டத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் கலெக்டர் தெரிவித்ததாவது, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 121(அ)ன் படி வெளியிட்டாளர் மற்றும் பிரசுரிப்பாளர் ஆகியோரது பெயர் மற்றும் முகவரி இன்றி எந்தவொரு தேர்தல் துண்டுபிரதி மற்றும் சுவரொட்டியும் எந்தவொரு நபராலும் அச்சிடவோ அல்லது வெளியிடப்படவோ கூடாது. மேலும் வெளியீட்டாளர்களிடமிருந்து உறுதிமொழி படிவம் பெறப்பட்ட பின்னரே, அச்சிடப்பட வேண்டும். மேலும் உறுதி மொழியில் வெளியீட்டாளரின் கையொப்பம் அவரை தனிப்பட்ட முறையில் அறிந்தவர்கள் இருவரின் சான்றொப்பம் பெறப்பட்டிருக்க வேண்டும்.மேலும், பிரசுரிப்பாளர் அச்சான்றொப்பத்தின் ஒரு நகலையும், பிரசுரதிக்கப்பட்ட பிரசுரத்தின் நான்கு நகலையும் அதனுடன் பிரசுரத்திற்காக பெறப்பட்ட தொகையான ரசீதையும், குறிப்பிட்டு மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு அனுப்பப்பட வேண்டும். மேற்கண்ட சரத்துகள் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களால் செய்திதாளில் செய்யப்படும் விளம்பரத்திற்கும் பொருந்தும். மேற்கண்ட விதிகளை பின்பற்றாமல் ஏதேனும் துண்டு பிரசுரங்கள் அல்லது சுவரொட்டிகள் மூலம் விளம்பரம் செய்யப்பட்டால், துணை பிரிவு 1 அல்லது துணை பிரிவு 2 விதிகளின்படி எந்தவொரு நபருக்கும் விதிக்கப்படும் தண்டனையானது ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்படக்கூடிய சிறைவாசம் அல்லது இரண்டாயிரம் ரூபாய்க்கு நீட்டிக்கக் கூடிய அபராதம் அல்லது இரண்டும். அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் இ-ப்பதிப்பு  செய்திதாள்களில் கொடுக்கப்படும் விளம்பரங்களுக்கு ஊடக மையம் மற்றும் ஊடக சான்றிதழ் வழங்கும் குழு (விசிவிசி) -யிடம் முன்சான்றிதழ் பெறப்படவேண்டும்.தேர்தல் நாள் மற்றும் தேர்தலுக்கு முந்தைய நாள் செய்தித்தாளில் வெளியிடப்படும் அரசியல் விளம்பரங்களுக்கு ஊடக மையம் மற்றும் ஊடக சான்றிதழ் வழங்கும் குழுவிடம் முன்சான்றிதழ் பெறப்படவேண்டும். உள்ளுர் தொலைக்காட்சிகளில் அரசியல் விளம்பரம் வெளியிடும்போது, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் விளம்பரம் வெளியிடுவதற்கு 5 நாட்களுக்கு முன்பும், இதர கட்சியினர் 7 நாட்களுக்கு முன்பும் ஊடக மையம் மற்றும் ஊடக சான்றிதழ் வழங்கும் குழுவிடம் உள்ள படிவத்தினை பூர்த்தி செய்து, விளம்பரத்திற்கான படத்தினையும், வாசகங்கள் எழுத்து வடிவிலும் வழங்க வேண்டும் என்றார்.இதில், மாவட்ட வருவாய் அலுவலர் பொற்கொடி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிதாபானு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: