வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து மனிதசங்கிலி மூலம் விழிப்புணர்வு

நாமக்கல், மார்ச் 14: நாமக்கல்லில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து வாக்காளர் விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் ஆசியாமரியம் தலைமையில் நேற்று நடந்தது. தேர்தல் ஆணையம், வாக்காளர்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு வசதிகள் செய்து தருகிறது. நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் பிரிவில் இலவச தொடர்பு எண் 1950ஐ தொடர்பு கொண்டு வாக்காளர்கள், வாக்காளராக பதிவு செய்ய தேவையான தகவல்கள், எந்த பகுதியில் மற்றும் எந்த வாக்குசாவடிகளில் தாங்கள் வாக்களிக்க வேண்டும் என்ற விவரத்தை தங்களது பெயரையும், தந்தை பெயரையும் தெரிவிப்பதன் மூலம் அறிந்துக் கொள்ளும் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும், இதே விவரங்களை போன் செயலி மூலம் எளிதில் தெரிந்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வாக்காளர்கள் அலுவலகங்களுக்கு செல்லாமலேயே, வரிசையில் நிற்காமலேயே தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே கணினி அல்லது கைப்பேசி உதவியுடன்  இணையதளத்தின் மூலம் பதிவு செய்யவும், தனது விண்ணப்பத்தின் தற்போதைய நிலையினை தெரிந்துகொள்ளவும் தேவையான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் வாக்காளர்களுக்கான இச்சேவைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அனைத்து வாக்காளர்களும் தேர்தல் நாளன்று வாக்களிக்கவும், பல்வேறு விழிப்புணர்வுகளை மனித சங்கிலி, கலை நிகழ்ச்சிகள், ஊர்வலங்கள் மூலமாக ஏற்படுத்தப்படுகின்றன. இதன்படி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மனித சங்கிலி நிகழ்ச்சி கலெக்டர் ஆசியா மரியம் தலைமையில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், நாமக்கல் சப்கலெக்டர் கிராந்திகுமார்பதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி, மகளிர் திட்ட இயக்குநர் மணி, ரெட்கிராஸ் ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்கண்ணன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள், சுரபி பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள், மகளிர் சுய உதவிக் குழுவினர் ஆகியோர் கலந்து கொண்டனர்

Related Stories: