நெல்லை மாவட்டத்தில் 9 இடத்தில் சோதனை சாவடிகள்

புளியங்குடி, மார்ச் 14: நெல்லை மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி 9 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இதில் வருவாய் மற்றும் காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள், ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. தமிழகத்தில் 2ம் கட்டமாக ஏப்.18ல் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் பணப் புழக்கத்தை தடுக்க 40க்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு அந்தப் படைகள் ஆங்காங்கே வாகன சோதனை நடத்தி வருகின்றன. இந்நிலையில் நெல்லை, தென்காசி 2 தொகுதிகளிலும் மாவட்ட எல்லையில் வழக்கம்போல் 9 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு வாகன சோதனை நடைபெற உள்ளது.  மாவட்டத்தின் வடபகுதியில் சிவகிரி தேவிப்பட்டினம் விலக்கில் விருதுநகர் எல்லையில் ஒரு சோதனைச் சாவடியும், சங்கரன்கோவில் அருகே கரிவலம்வந்தநல்லூர் பகுதியில் விருதுநகர் எல்லையிலும், கீழ் பகுதியில் தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகே கரட்டு மலை என்ற இடத்திலும், கங்கைகொண்டான் பகுதியில் ஒன்றும், தென்பகுதியில் காவல்கிணறு, திருச்செந்தூர் ரோடு, மேற்குப்பகுதியில் புளியரை, கடையநல்லூருக்கு மேற்கே கேரள எல்லையாக மேக்கரை, நெல்லை மாநகரத்தில் ஒன்றும் என 9 இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்படுகின்றன. இந்த சோதனை சாவடியில் வருவாய்த்துறை சார்பில் தாசில்தார் மற்றும் ஊழியர்கள், உள்ளூர் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த எஸ்ஐ மற்றும் போலீசார் ஆகியோர் கொண்ட குழுவினர், வெளி மாவட்டத்திலிருந்து வரும் வாகனங்களையும், நெல்லை மாவட்ட வாகனங்களிலும் சோதனை மேற்கொள்வர். பகலில் ஒரு குழுவும், இரவில் ஒரு குழுவும் சோதனை நடத்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: