குடிநீர் பிரச்னைக்கு தீர்வு காண்பதில் அலட்சியம்? காலி குடங்களுடன் மக்கள் சாலை மறியல் =அரசு பஸ் சிறைபிடிப்பு =அதிகாரிகளுடன் வாக்குவாதம்

ஊத்துக்கோட்டை, பிப். 14: ஊத்துக்கோட்டை அருகே பேரிட்டிவாக்கம் ஊராட்சியில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்னைக்கு தீர்வுகாணாத அதிகாரிகளை கண்டித்து கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியல் செய்தனர். மேலும், அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஊத்துக்கோட்டை அருகே பேரிட்டிவாக்கம் கிராமத்தில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள 3 ஆழ்துளை கிணறுகள் மூலம் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இதில் கடந்த வாரம் ஒரு ஆழ்துளை கிணறு பழுதாகியது. மற்ற 2 ஆழ்துளை கிணறுகளிலும் ஏற்கனவே தண்ணீர் வற்றியிருந்தது. இதனால், அப்பகுதியில் கிராம மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர்.இதுகுறித்து புகார் தெரிவிக்க பேரிட்டிவாக்கம் ஊராட்சி செயலாளரை கிராம மக்கள் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து, தற்காலிகமாக தனி நபர்களுக்கு சொந்தமான வயல்வெளிகளில் இருக்கும் பம்ப்செட்டுகளில் இருந்து தண்ணீர் பிடித்து பயன்படுத்தினர். இதற்கும், நேற்று அந்த பம்ப்செட் உரிமையாளர்கள் தடை விதித்துவிட்டனர்.

இதில், ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், குடிநீர் பிரச்னைக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்காமல் இருக்கும் பேரிட்டிவாக்கம் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து, நேற்று காலை மாம்பாக்கம்-போந்தவாக்கம் சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த அரசு பஸ்சை சிறைபிடித்தனர்.இதுகுறித்து தகவலறிந்து பென்னலூர்பேட்டை எஸ்ஐ உதயபிரகாஷ், ஊத்துக்கோட்டை எஸ்ஐ பார்த்திபன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்தனர்.  கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ‘தடையின்றி குடிநீர் வழங்குவது குறித்து ஊராட்சி செயலாளர் தனசேகரன் நேரில் உறுதி கூறவேண்டும்’ என்று வலியுறுத்தினர்.பின்னர், ஒரு மணி நேரத்திற்கு பிறகு ஊராட்சி செயலாளர் வந்து, மதியத்துக்குள் குடிநீர் பிரச்னைக்கு தீர்வுகாணப்படும் என்று உறுதி அளித்தார் இதையடுத்து கிராம மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories: