தேசிய சிலம்ப போட்டியில் தமிழ்நாடு அணி சாம்பியன் கோப்பையை வென்று சாதனை

திருச்செங்கோடு, பிப்.13: திருச்செங்கோட்டில் நடந்த 15வது தேசிய சிலம்ப போட்டியில் தமிழ்நாடு அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது. திருச்செங்கோட்டில் அகில இந்திய சிலம்ப பெடரேசன், தமிழ்நாடு சிலம்ப கழகம் ஆகியவை இணைந்து கேஎஸ்ஆர் கல்வி நிறுவன வளாகத்தில் 15வது தேசிய அளவிலான சிலம்பம் சேம்பியன் ஷிப் போட்டியை நடத்தியது. இதில், 900க்கும் மேற்பட்ட ஆடவர் மற்றும் மகளிர் கலந்து கொண்டனர். மினி சப்ஜூனியர், சப்ஜூனியர், ஜூனியர் மற்றும் சீனியர் என நான்கு வகையாக வயது மற்றும் எடை அளவுகளை கொண்டு போட்டிகள் நடந்தது. நெடுங்கம்பம், நடுக்கம்பம், இரட்டை கம்பம், வாள் மற்றும் சுருள் கத்தி உள்ளிட்ட 14 வகையான பிரிவுகளில் தனிப்பிரிவு, இரட்டையர் பிரிவு என போட்டிகள் நடந்தது. மினி சப்ஜூனியர் பிரிவில் தமிழ்நாடு அணி 105 புள்ளிகளை பெற்று முதலிடத்தை பிடித்தது. குஜராத் அணி 85 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடம் பெற்றது. சப்ஜூனியர் பிரிவில் மஹாராஷ்டிரா அணி 90 புள்ளிகளுடன் முதலிடத்தையும், தமிழ்நாடு அணி 75 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தையும் பிடித்தன. ஜூனியர் பிரிவில் டெல்லி அணி 115 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தது. பாண்டிச்சேரி அணி 70 புள்ளிகளுடன் இரண்டாவது இடம் பிடித்தது.

சீனியர் பிரிவில் தமிழ்நாடு அணி 150 புள்ளிகளை பெற்று முதலிடம் பெற்றது. மஹாராஷ்டிரா அணி 110 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தை பிடித்தது. ஒட்டு மொத்த அளவில் தமிழக அணி சேம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. நாமக்கல் மாவட்ட சிலம்பம் கழக பொதுச்செயலாளர் மஞ்சு வெள்ளியங்கிரி தலைமையில் நடந்த பரிசளிப்பு விழாவில்  அகாடமிக் ஹெட் காஞ்சனமாலா வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், கோப்பைகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் உலக சிலம்ப சம்மேளன பொதுச்செயலாளர் செல்வராஜ், இந்திய சிலம்ப சம்மேளன பொதுச்செயலாலர் ஐரின் செல்வராஜ், கல்லூரி முதல்வர்கள் மகுடேஸ்வரன், ராதாகிருஷ்ணன், கார்த்திகேயன், சுரேஷ்பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர்.போட்டிகளை முன்னின்று நடத்திய அகில உலக சிலம்ப சம்மேளனத்தின் பொதுச்செயலாளர்  செல்வராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

நான்கு நாட்களாக நடந்த அகில இந்திய சிலம்ப சேம்பியன் ஷிப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் வரும் ஏப்ரல் மாதம் நாகர்கோவிலில் நடக்க உள்ள 4வது ஆசிய சிலம்பம் சேம்பியன் ஷிப் போட்டிகளிலும், மலேசியாவில் வரும் ஆகஸ்டு மாதம் 10ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடக்க உள்ள 4வது உலக சிலம்ப சேம்பியன் ஷிப் போட்டிகளிலும் கலந்து கொண்டு விளையாட உள்ளனர். நமது பாரம்பரிய தற்காப்பு கலையான சிலம்பத்தை கடந்த 20 வருடங்களாக மலேசிய அரசும், மலேசிய ஒலிம்பிக் சங்கமும் அங்கீகரித்துள்ளன. 2 முறை உலக அளவிலான போட்டிகளையும் நடத்தி உள்ளது. தமிழர்களின் பாரம்பரிய கலையான சிலம்பத்தை இன்னும் மத்திய அரசு அங்கீகரிக்கவில்லை சீனாவின் வூசு, கொரியாவின் தேக்வாண்டோ, ஜப்பானின் கராத்தே ஜூடோவிற்கு ஆண்டுதோறும் பலகோடி ரூபாய் நிதி ஒதுக்கி வளர்ப்பது போல் சிலம்பத்தையும் மத்திய அரசு அங்கீகரித்து ஊக்கம் தரவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: