ஆண்டிப்பாளையம் கிராமத்தில் ஆக்கிரமிப்பில் சிக்கிய புது ஏரி

சேத்தியாத்தோப்பு, பிப். 13: கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே அமைந்துள்ளது ஆண்டிப்பாளையம் கிராமம். இக்கிராமத்தில் அமைந்துள்ளது சுமார் 44 ஏக்கர் பரப்பளவுள்ள கருவேலங்காடு மற்றும் புது ஏரி. இந்த ஏரியும், கருவேலங்காட்டை கடந்த இருபதாண்டுகளுக்கும் மேலாக இப்பகுதியைச் சேர்ந்த பலர் ஆக்கிரமிப்பு செய்து, கருவேலங்காட்டிலுள்ள மரங்களை அழித்து வயல்களாக்கி வருகின்றனர். இந்த கருவேலங்காடானது தமிழக அரசின் வனத்துறை சார்பில் பராமரிக்கப்படும் காடாக இருந்து வரும் வேளையில் அதிகாரிகளுக்கு தெரியாமல் ஏரியையும், கருவேலங்காட்டை அழித்தும் வயல்களாக்கி கரும்பு, நெல், மணிலா உள்ளிட்ட பயிர்களை பயிர்செய்து வருகிறார்கள். இந்த புது ஏரிக்கு தண்ணீர்வரும் வழிகள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டதால் தற்போது ஏரியில் தண்ணீர் இல்லை. ஏரியில் தண்ணீர் நிரம்புவதால் இப்பகுதியிலுள்ள சுமார் இருநூறுக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வந்தது. பல கிராமங்களுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. தமிழக அரசின் வனத்துறை சார்பில் உருவாக்கப்பட்ட கருவேலங்காடு இப்போது அழிக்கப்பட்டு வருவதால் இந்தக்காட்டில் ஏராளமான மயில்கள் மற்றும் பலவிதமான பறவைகள் அழிந்து வருகின்றன. சமூக விரோதிகள் வேட்டையாடவும் செய்கிறார்கள் என்று இப்பகுதியினர்தெரிவிக்கிறார்கள். எனவே அதிகாரிகள் இப்பகுதியை ஆய்வு செய்து ஆக்கிரமித்து அழிக்கப்பட்டு வரும் கருவேலங்காட்டையும், புது ஏரியை மீட்டெடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: