தென்காசி அருகே விளைநிலங்களுக்குள் புகுந்து யானைகள் அட்டகாசம்

தென்காசி, பிப்.13: தென்காசியை அடுத்த மத்தளம்பாறை அருகே காட்டு யானைகள் மீண்டும் விளைநிலங்களில் புகுந்து சேதப்படுத்தியது.     தென்காசியை அடுத்த மத்தளம்பாறை கென்டி ஊத்து பகுதியில் கடந்த வாரம் காட்டு யானைகள் கூட்டமாக புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தியது. இதில் தென்னை, வாழை, நெற்பயிர்கள் ஆகியவை சேதமடைந்தது. கிட்டத்தட்ட ஒரு வாரம் கடந்த நிலையில் நேற்று அதிகாலை வேளையில் மீண்டும் அதே பகுதியில் யானை கூட்டம் விளைநிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது. இதில் அருணாசலம் என்பவருக்கு சொந்தான 10 தென்னை மரங்கள், சேதுராமன் என்பவருக்கு சொதமான 3 ஏக்கர் நெற்பயிர், பொன்னையா என்பவருக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் வாழை மற்றும் 5 தென்னை மரங்கள், இசக்கி என்பவருக்கு சொந்தமான 20  தென்னை மரங்கள், வேலாயுதம் என்பவருக்கு சொந்தமான ஒரு ஏக்கர் வாழை பயிர் ஆகியவை அடங்கும். சேதமடைந்த பகுதிகளை குற்றாலம் வனவர் பாண்டியராஜ், வன காவலர் வனராஜ், வேட்டை தடுப்பு காவலர் மாடசாமி, ராஜ், சதாசிவம் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் ஒரே வாரத்தில் இரண்டு முறை யானைகள் வந்துள்ளதால் தொடர்ந்து அந்த பகுதியிலேயே முகாமிட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

 மத்தளம்பாறை பகுதியி கடந்த இருபது ஆண்டுகளில் யானைகள் வருவது இதுவே முதன்முறை ஆகும். வனப்பகுதியில் நிலவும் வறட்சியின் காரணமாக இவை நீர் அருந்துவதற்காக ஊருக்குள் வருவதாக வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும் வனத்துறையினர் கூறுகையில், ‘யானைகள் அதிகாலை இரண்டு முதல் நான்கு மணிக்குள் வந்துவிடுவதால் தொடரமுடியாத நிலை உள்ளது. இருந்தபோதும் யானைகளின் இருப்பிடத்தை கண்டுபிடித்து அவற்றை விரட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். வெடி தயார் நிலையில் உள்ளது. மேலும் மரம் அறுக்கும் இயந்திரத்தின் சப்தத்திற்கும் யானைகள் மிரட்சியடைகிறது. இது தவிர சைலன்சர் அகற்றப்பட்ட டிராக்டரின் சப்தத்திற்கும் யானைகள் மிரண்டு ஓடுகிறது. எனவே வனத்துறை ஊழியர்கள் தயார் நிலையில் இருக்கிறோம். மீண்டும் யானைகள் வந்தால் வனப்பகுதியில் விரட்டுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்’ என்றனர்.

Related Stories: