கடையநல்லூரில் புதிய தாலுகா அலுவலகம் கட்ட மாற்று இடம் தேர்வு

கடையநல்லூர், பிப்.13:    கடையநல்லூர் தாலுகா அலுவலகம் தற்போது மதுரை தேசிய நெடுஞ்சாலை பகுதியில் அமைந்துள்ள வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இயங்கி வருகிறது. கடந்த டிசம்பர் மாதம் 13ம் தேதி சொந்த கட்டிடம் கட்டுவதற்காக காசிதர்மம் செல்லும் பகுதியில் உள்ள அரசு நிலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் அந்த இடம் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் காட்டுப்பகுதியில் இருப்பதால் பெண்கள் சென்றுவர பாதுகாப்பு இருக்காது என்று அனைத்து கட்சி சார்பில் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டம் நடந்தது. தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ள இடத்திற்கு பதிலாக மதுரை சாலையில் உள்ள அரசுக்கு சொந்தமான கட்டிடங்கள் ஏதேனும் ஒன்றில் தாலுகா அலுவலகத்தை அமைக்கவேண்டும் என்று பொதுமக்களும், அனைத்துக்கட்சியினரும் கோரிக்கை வைத்திருந்தனர்.  இந்நிலையில் நேற்று மாவட்ட கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் கடையநல்லூரில் இதற்கு முன்னர் வேளாண்மை அலுவலகம் இயங்கி வந்த பழைய கட்டிடத்தை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். உடன் ஆர்.டி.ஓ சவுந்தரராஜ், தாசில்தார் தங்கராஜ், திட்ட அலுவலர் பழனி மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

Related Stories: