பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தி கேழ்வரகில் ஏக்கருக்கு 3 டன் வரை மகசூல் பெறும் தொழில்நுட்பம்

கிருஷ்ணகிரி, ஜன.22: கேழ்வரகில் கூடுதல் மகசூல் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து கிருஷ்ணகிரி வேளாண்மை உதவி இயக்குநர் பச்சையப்பன் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கிருஷ்ணகிரி வட்டாரத்தில் பரவலாக கேழ்வரகு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கேழ்வரகு பயிரானது தை பட்டம் சாகுபடி செய்ய ஏற்ற சிறந்த பருவமாகும். நடவு செய்ய ஏக்கருக்கு 2 கிலோ விதை போதுமானது. மேலும், மண் பரிசோதனைப்படி உரமிட வேண்டும். ஏக்கருக்கு 5 கிலோ நுண்ணூட்டச் சத்தினை மணலுடன் கலந்து கடைசி உழவின் பின் மண்ணில் மேலாக தூவ வேண்டும். துத்தநாகச் சத்து குறைபாடு இருந்தால் 10 கிலோ துத்தநாக சல்பேட்டை மணலுடன் கலந்து இட வேண்டும்.

கோடை உழவு செய்வதன் மூலம் களைகள் வளராமல் தடுக்கலாம். களைகள் அதிகம் இருப்பின் அட்ரசீன் 200 கிராம் களைக்கொல்லியை நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். ஊடுபயிராக பயறு வகைப்பயிர்களை பயிர் செய்தால் அட்ரசீன் உபயோகப்படுத்தக் கூடாது. அந்த வகையில் களை நிர்வாகம் தேவைப்படின், நடவு செய்த 35வது நாளில் ஒரு முறை கைகளால் களைகளை அகற்றலாம். 8 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை தேவைக்கேற்ப நீர் பாய்ச்ச வேண்டும்.

மேலும், ராகியில் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறைவாகவே இருக்கும். பயிரில் மஞ்சள் நிறத்தில் மொசைக் பாதிப்புகள் காணப்பட்டால், அந்த செடிகளை உடனே அகற்றிட வேண்டும். பயிரின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறும்போது வயது முதிர்ந்தது என்பதை உணரலாம். இதையடுத்து, கதிர்களை அறுவடை செய்யலாம். அறுவடை செய்யப்பட்ட கதிர்களை உடனடியாக காய வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் மிக எளிதாக 2.5 முதல் 3 டன் வரையில் மகசூல் கிடைக்கும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: