புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் தேரோட்டம்

புளியங்குடி, ஜன.22: புளியங்குடி பாலசுப்பிரமணிய சுவாமி கோவில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர். புளியங்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத்திருவிழா வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டும் தைப்பூசம் திருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஒவ்வொரு நாளும் அந்தந்த மண்டகப்படிதாரர்கள் சார்பாக சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் செய்து சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று விமரிசையாக நடைபெற்றது. காலை 10 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் ஆராதனைகள் செய்யப்பட்டு 11 மணியளவில் சுவாமி திருத்தேரில் எழுந்தருளினார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷம் எழுப்ப சுவாமி நான்கு ரத வீதி வழியாக சுற்றி வந்து பக்தர்களுக்கு காட்சியளித்து சுமார் 12 மணியளவில் தேர் நிலையத்தை வந்தடைந்தது. நாளை 23ம் தேதி புன்னையாபுரம் யாதவர் சமுதாயத்தின் சார்பாக தெப்ப உற்சவ விழா நடைபெறுகிறது.

Related Stories: