சொத்து தகராறில் தந்தையை குத்திக்கொன்ற மகன் ; காட்பாடியில் பயங்கரம்

வேலூர், ஜன.8: காட்பாடியில் சொத்து தகராறில் தந்தையை மகனே கத்தியால் குத்தி கொலை செய்தார். பின்னர் கத்தியுடன் விஏஓவிடம் சரண் அடைந்தார்.வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேனூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணன்(57). அதே பகுதியில் இறைச்சி வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி நிர்மலா(50). இவர்களுக்கு சுரேஷ்(35), பிரபு(17) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இதில் பிரபு வேலூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் முதலாமாண்டு படித்து வருகிறார்.இந்நிலையில், நிர்மலா கடந்த சில மாதங்களுக்கு முன்பு புற்றுநோய் பாதிப்பில் இறந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து கண்ணன் சரிவர வீட்டிற்கு வராமல் வெளியே தங்கியிருந்தாராம். அப்போது வேறு ஒரு பெண்ணுடன் கண்ணனுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தான் சம்பாதிக்கும் பணத்தை வீட்டு செலவிற்கு கொடுக்காமல் உல்லாசமாக வாழ்ந்து வந்தாராம்.

இதனை அறிந்த மகன்கள் தந்தையை கண்டித்துள்ளனர். மேலும் சொத்தை தருமாறு கேட்டுள்ளனர். அதற்கு கண்ணன், ‘உங்கள் தாய்க்கு செலவு செய்துவிட்டேன், என் சொத்தில் உங்களுக்கு எந்த பங்கும் கிடையாது. என் சொத்துக்களை என் விருப்பத்தின்படி யாருக்கு வேண்டுமானாலும் எழுதி வைப்பேன். அதை கேட்க உங்களுக்கு உரிமை இல்லை என்று கூறினாராம். இதனால் மகன்கள் இருவரும் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகினர்.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்த கண்ணன் தன் அறையில் வழக்கம்போல் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இளைய மகன் பிரபு தந்தையிடம், ‘சொத்தை வேறு யாருக்கும் கொடுக்கக் கூடாது’ என்றாராம்.

அப்போது ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த இளைய மகன், வீட்டின் சமையல் அறையில் இருந்த கத்தியால் கண்ணனை குத்தினார். இதில் கண்ணன் அலறிதுடித்தபடி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.பின்னர், வீட்டில் இருந்து வெளியே வந்த பிரபு கத்தியுடன் விருதம்பட்டு விஏஓ முன்னிலையில் சரணடைந்தார். இதுதொடர்பாக விஏஓ அளித்த தகவலின்பேரில் காட்பாடி டிஎஸ்பி ராதாகிருஷ்ணன்(பொறுப்பு), இன்ஸ்பெக்டர் புகழ் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.கைது செய்யப்பட்ட பிரபுவிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சொத்து பிரச்னை தொடர்பாகவே கொலை நடந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக வழக்குபதிவு செய்த போலீசார் பிரபுவை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பார்ஸ்டல் சிறையில் அடைத்தனர்.

வேலூர் மாவட்டத்தில் சொத்துக்காக கடந்த 2 ஆண்டுகளில் அதிகளவில் ரத்த உறவுகள் மீது கொலை மற்றும் தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சொத்து தகராறு காரணமாக காட்பாடி வாழ்வாங்குன்றம் கிராமத்தில் பரசுராமன் என்ற விவசாயியை சொத்துக்காக மகனே கல்லை தூக்கிப்போட்டு கொலை செய்தார்.அதேபோல் வாலாஜா, திருப்பத்தூர் என மாவட்டத்தில் கடந்த ஆண்டு மட்டும் சொத்து தகராறில் 3 கொலைகள் அரங்கேறியிருப்பது சமூக ஆர்வலர்களை கவலையடைய செய்துள்ளது.

Related Stories: