சுயதொழில் பயிற்சி சான்று வழங்கும் விழாவில் தன் திருமணத்தை தானே தடுத்து நிறுத்திய மாணவிக்கு தையல் இயந்திரம் இன்ப அதிர்ச்சி அளித்த கலெக்டர்

திருவண்ணாமலை, ஜன.4: சுயதொழில் பயிற்சி சான்று வழங்கும் விழாவில் தன் திருமணத்தை தானே தடுத்து நிறுத்திய மாணவிக்கு கலெக்டர் தையல் இயந்திரம் வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்தார்.திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில், இலவச தையற்கலை மற்றும் தொழிற்பயற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட நூலக அலுவலர் கோகிலவாணி, முதல் நிலை நூலகர் பெ.வள்ளி, அ.சாயிராம் முன்னிலை வகித்தனர்,நிகழ்ச்சியில், சான்றிதழ் வழங்கி கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி பேசுகையில், ‘திறமையும், தனித்துவமும் இருந்தால்தான், போட்டி நிறைந்த உலகில் நாம் வெற்றியை பெற முடியும். சுய தொழிலில் ஈடுபாடும் அக்கறையும் இருந்தால் முன்னேற முடியும். ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. எனவே, பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்களை தயாரிக்க வாய்ப்புகள் உருவாகியுள்ளன. அதுபோன்ற தொழிலை தேர்ந்தெடுத்து பயன்பெறலாம்’ என்றார்.தொடர்ந்து, தன்னுடைய விருப்பத்துக்கு மாறாக, தனக்கு நடக்க இருந்த குழந்தை திருமணம் குறித்து, கலெக்டருக்கு தகவல் தெரிவித்து தனது திருமணத்தை தானே தடுத்து நிறுத்திய செய்யாறு அடுத்த ஏனாதவாடி கிராமத்தை சேர்ந்த சாதனை மாணவி ரஞ்சிதா, இந்த பயிற்சியில் பங்கேற்று சான்று பெற்றார்.

அப்போது, மாணவி ரஞ்சிதா நன்றி தெரிவித்து பேசுகையில், ‘தந்தை இழந்து தாயின் பராமரிப்பில் இருப்பதாகவும், தனக்கு கட்டாயப்படுத்தி உறவினர் ஒருவருடன் நடக்க இருந்த திருமணம் குறித்து கலெக்டருக்கு தகவல் தெரிவித்ததால், தன்னுடைய திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. தற்போது திருவண்ணாமலையில் உள்ள அரசு காப்பகத்தில் தங்கி, இப்பயிற்சியை முடித்தேன். மேலும், இலவச தையல் இயந்திரம் வழங்கினால் சுய தொழில் செய்ய பயனுள்ளதாக இருக்கும்’ என்றார்.மாணவியின் கோரிக்கையை ஏற்ற கலெக்டர், உடனடியாக தையல் இயந்திரத்தை வரவழைத்து மேடையிலேயே மாணவி ரஞ்சிதாவுக்கு வழங்கி இன்ப அதிர்ச்சி அளித்தார்.

Related Stories: