கிராமப்புறங்களில் ரத்தசோகை சிகிச்சை முகாம்

திருவள்ளூர், டிச. 11: உடல் இயக்கத்துக்கு உறுதுணையாக இருக்கும் ரத்தத்தில்,’’ஹீமோகுளோபின்’’ அளவு குறையும்போது, சிவப்பணுக்கள் நிறம், வளர்ச்சி, எண்ணிக்கை குறையும். உடல் செல்கள் மற்றும் திசுக்களுக்கு செல்லும் ஆக்சிஜன் அளவும் குறையும். இதன் மூலம், உடல் தளர்ந்து சோர்வு ஏற்படும்.

இதே நிலை நீடித்தால் ரத்த சோகை ஏற்படும். இதற்கு, சத்து குறைபாடுள்ள உணவு, சில வகை புற்றுநோய், பாரம்பரிய பிரச்னைகள் காரணம் என  கூறப்படுகிறது. சில மருந்து, மாத்திரையால் ஏற்படும் பின் விளைவு கூட, இத்தகைய பிரச்னையை ஏற்படுத்தி விடுகிறது. இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், ‘’வருமானம் குறைவு, சத்தான உணவு இல்லாதது போன்ற காரணங்களால், கிராமப்புற பெண்களிடம், ரத்தசோகை பாதிப்பு அதிகம் தென்படுகிறது. சரியான சமயத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதது, சத்து நிறைந்த போதிய உணவின்மை போன்ற காரணங்களால், குழந்தைகளையும் இந்நோய் விட்டு வைப்பதில்லை.

ரத்தசோகையை போக்க, இரும்பு சத்து நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டும். ரத்தசோகை நோயை தடுக்க, சுகாதாரத்துறை மூலம் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படுகிறது. இருப்பினும், கிராமங்களில் முகாம் நடத்தி பாதிக்கப்பட்டோரை கண்டறிந்து சிகிச்சை அளிப்பதும் அவசியமாக உள்ளது’’ என்றனர்.

எனவே, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் சுகாதாரத்துறை சார்பில் முகாம் நடத்தி, ரத்தசோகை பாதிக்கப்பட்டோரை கண்டறிந்து சிகிச்சையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏழை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: