போதிய மழையில்லாததால் காய்ந்து கருகிய சின்னவெங்காய செடிகள் ராசிபுரம் விவசாயிகள் கவலை

ராசிபுரம், டிச.7:  ராசிபுரம் வட்டாரத்தில் போதிய மழை பெய்யாததால், 50 ஏக்கரில் விவசாயிகள் பயிரிட்டிருந்த சின்னவெங்காய செடிகள் காய்ந்து கருகி விட்டது. ராசிபுரம் வட்டாரத்தில் பாய்ச்சல், ராமநாயக்கன்புதூர், குள்ளப்பநாயக்கன்பட்டி, முருங்கப்பட்டி, அப்பநாயக்கன்பட்டி, சந்திரசேகரபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரி நிலங்களிலும், கிணற்றுப்பாசன நிலங்களிலும் விவசாயிகள் சின்னவெங்காயம் பயிரிட்டுள்ளனர். நடப்பாண்டு அக்டோபர் மாதம், 100 ஏக்கரில் சின்னவெங்காயம் பயிரிட்டனர். 2 மாதம் வளர்ந்த நிலையில், ேபாதிய மழையில்லாததால் செடிகள் வளர்ச்சி குன்றி காய்ந்து கருகத்தொடங்கியுள்ளது. இதுகுறித்து குள்ளப்பநாயக்கன்பட்டி விவசாயிகள் கூறியதாவது:

சின்ன வெங்காயத்துக்கு கடந்த ஓராண்டாகவே நல்ல விலை கிடைத்து வருகிறது. உழவர் சந்தை, வெளிமார்க்கெட்டில் கிலோ அதிகபட்சம் ₹80 வரை விலை கிடைத்தது. தற்போது கிலோ ₹30 வரை விற்பனையாகிறது. தேவை அதிகரித்து வருவதால்,  ராசிபுரம் வட்டாரத்தில் அதிகளவில் சின்னவெங்காயம் பயிரிட்டோம். ஒரு ஏக்கரில் சின்னவெங்காயம் பயிரிட ₹50 ஆயிரம் செலவாகிறது. விதைப்பு சமயத்தில் நல்ல மழை பெய்ததால், நம்பிக்கையுடன் பயிரிட்டோம். ஜனவரி மாதத்தில் அறுவடை செய்யலாம் என இருந்த நிலையில், போதிய மழை பெய்யாததால் 60 நாட்கள் வரை வளர்ந்த செடிகள் காய்ந்து கருகத்தொடங்கியுள்ளது.

விவசாய கிணறுகளிலும் தண்ணீர் இல்லாததால், சுற்றுவட்டாரத்தில் சுமார் 50 ஏக்கரில் பயிரிட்டுள்ள சின்னவெங்காய செடிகள் காய்ந்து கருகி விட்டது.

இனி மழை பெய்தாலும் செடிகள் பிழைக்க வழியில்லை. எனவே, வேறு வழியின்றி தோட்டத்தில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விட்டுள்ளோம். பாதிக்கப்பட்ட பகுதிகளில் வேளாண் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, நிவாரணம் பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.

Related Stories: