காரைக்காலில் பழுதடைந்த மாணவர்கள் விடுதியை உடனே சீரமைக்க வலியுறுத்தல்

காரைக்கால், டிச.7: காரைக்கால் மாவட்டம் முழுவதும் பழுதடைந்த மாணவர்கள் விடுதியை உடனே புதுப்பிக்க வேண்டும் என, அம்பேத்கர் கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டு மையம் வலியுறுத்தியுள்ளது.காரைக்கால் அம்பேத்கர் கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டு மைய நிறுவனர் தணிகாசலம், மைய நிர்வாகிகளுடன் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். தொடர்ந்து, புதுச்சேரி சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமிக்கு அனுப்பிய மனுவில் கூறியிருப்பது: அம்பேத்கரின் 125வது ஆண்டுவிழாவை கொண்டாடும் வேளையில் அவருக்கு காரைக்காலில் மணிமண்டபம் கட்டவேண்டும். காரைக்கால் மாவட்ட பள்ளி, கல்லூரியில் பயிலும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு காலம் கடத்தாமல் கல்வி உதவித்தொகையை வழங்க வேண்டும். சிறப்பு கூறு திட்ட நிதியை வேறு அரசுத்துறைகளுக்கு பயன்படுத்த கூடாது. அதேபோல், காரைக்கால் மாவட்டத்திற்கான சிறப்பு கூறு நிதியை கூடுதலாக்க வேண்டும்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கான ஈமச்சடங்கு உதவி நிதியை, இறப்பு நேரிடும் அன்றைய தினம் அல்லது மறுநாள் வழங்கவேண்டும். காரை கோவில்பத்து அரசு மாணவர் விடுதி மற்றும் ஒரு சில விடுதிகள் பழமையாக இருப்பதால் அவற்றை உடனே புதுப்பித்து தரவேண்டும். காரைக்காலில் தாழ்த்தப்பட்ட மக்கள் பலர் ஒரே வீட்டில் பல குடும்பங்களாக  வசிப்பதால் பலவித இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது. எனவே 5 சட்டமன்ற தொகுதிகளிலும் வருடம் 1000 நபர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கவேண்டும்.அரசு புறம்போக்கு நிலம் இல்லாத பட்சத்தில் வேறு நிலத்தை கையகப்படுத்தி வழங்கவேண்டும். இலவச வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வழங்கும் நிதியை உயர்த்தி வழங்கவேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டிருந்தது.

Related Stories: