அஞ்சல் நிலையங்களில் பாஸ்புக் தட்டுப்பாடு அச்சடிக்கப்பட்ட பக்கங்களில் புதிய பதிவு

நாங்குநேரி, டிச. 6:  அஞ்சல் நிலையங்களில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கு புதிய பாஸ்புக் வழங்கப்படாததால் அச்சடிக்கப்பட்ட பக்கங்களில் வரவு வைத்து தரப்படுகிறது. இது சரியாக தெரியாததால் வாடிக்கையாளர்கள் தவிக்கின்றனர்.

நாங்குநேரியை அடுத்துள்ள தெய்வநாயகப்பேரி அஞ்சல் அலுவலகத்தில் தெய்வநாயகபேரி லெத்திகுளம் மேலூர் மற்று கீழுர் உள்பட பல்வேறு குக்கிராம பொதுமக்கள் சுமார் 1500க்கும் மேற்பட்டவர்கள் சேமிப்புக்கணக்கு துவங்கி பணம் சேமித்து வருகிறார்கள். அதிலிருந்து அவசர தேவைகளுக்கு பணம் எடுத்து பயன்படுத்துகிறார்கள். சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு கணக்கு புத்தகம் வழங்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் பதிவு பக்கங்கள் முடிந்த மற்றும் புதிய கணக்கு துவங்கியுள்ளவர்களுக்கு கடந்த சில மாதங்களாக புதிய கணக்கு புத்தகங்கள் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே சேமிப்புக்கணக்கு புத்தகங்களின் அட்டை முதல் காலியாக உள்ள அனைத்து இடங்களிலும் அஞ்லக ஊழியர்கள் நெருக்கமாக சீல் வைத்தும் எழுதியும் கொடுத்துள்ளனர். இதனால் சேமிப்புக்கணக்கு வரவு-செலவு தொடர்பான பதிவுகள் தெளிவாக இல்லாததால் வாடிக்கையாளர்களுக்கு சந்தேகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.எனவே தெய்வநாயகப்பேரி அஞ்சலகத்திற்கு புதிய கணக்கு புத்தகங்களை வழங்கி வாடிக்கையாளர்கள் கணக்கை தொடர்ந்து நம்பிக்கையுடன் பராமரிக்க உதவ வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: