மாநில அளவிலான மூத்தோர் தடகளத்தில் பங்கேற்க அழைப்பு

கிருஷ்ணகிரி, நவ.2: தஞ்சாவூரில் நடைபெறும் மாநில மூத்தோர் தடகள் போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட மூத்தோர் தடகள கழக தலைவர் மணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு மூத்தோர் தடகள கழகத்தின் சார்பில், மாநில அளவிலான தடகள போட்டிகள் வரும் டிசம்பர் மாதம் 7ம் தேதி முதல் 9ம் தேதி வரை 3 நாட்கள் தஞ்சாவூர் பூண்டி ஏவிவிஎம் ஸ்ரீ புஷ்பம் கல்லூரி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில், 35 வயதுக்கு மேற்பட்டோர் முதல் 100 வயதிற்குட்பட்டோர் வரையிலானோருக்கு வயது வாரியாக போட்டிகள் நடத்தப்படவுள்ளன. ஓட்டம், நடை, தடை தாண்டுதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், சங்கிலி குண்டு எறிதல், குச்சி வைத்து உயரம் தாண்டுதல், தட்டு எறிதல், தொடர் ஓட்டம் போன்ற போட்டிகள் இடம் பெறுகின்றன. மாநில அளவில் வெற்றி பெறுபவர்கள், தேசிய போட்டிக்கு தேர்வு செய்யப்படவுள்ளனர். போட்டிகளில் பங்கேற்கும் வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் சீருடை இலவசமாக வழங்கப்படும். அனைத்து தனியார் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், ஆசிரியர்கள், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கலாம். ஒரு நபர் மூன்று போட்டிகள் வரை பங்கேற்கலாம். எனவே, கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த போட்டியில் பங்கேற்க விரும்பும் வீரர், வீராங்கனைகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் வருகிற டிசம்பர் ம் தேதி காலை 8 மணியளவில் நடைபெறும் தேர்வு போட்டியில் கலந்து கொள்ளலாம். அப்போது, தங்களது வயது மற்றும் கல்விச்சான்றுகளுடன் வரவேண்டும். மேலும், விவரங்களுக்கு மாவட்ட மூத்தோர் தடகள கழக செயலர் மாதையன், பொருளாளர் சத்தியநாதன், உடற்கல்வி இயக்குனர் ஆகியோரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: