ஓசூரில் கடும் போக்குவரத்து நெரிசல்

ஓசூர்,நவ.2: தீபாவளி பண்டிகையையொட்டி ஓசூரில் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. புத்தாடையுடன் பட்டாசு மற்றும் இனிப்பு பதார்த்தங்கள் வாங்குவதற்காக நேற்றிரவு ஆயிரக்கணக்கான மக்கள் ஓசூரில் குவிந்தனர். குறிப்பாக பட்டாசு கொள்முதலுக்காக அருகிலுள்ள கர்நாடக மாநில மக்களும் திரண்டதால் எங்கு பார்த்தாலும் மக்கள் தலைகளாகவே காணப்பட்டது. பொருட்களை வாங்கிக்கொண்டு இரவு 8 மணியளவில் அனைவரும் ஒரே நேரத்தில் டூவீலர் உள்ளிட்ட வாகனங்களில் தங்களது வீடுகளுக்கு புறப்பட்டுச்சென்றதால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ஓசூர் நகரில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் தினந்தோறும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எம்.ஜி. சாலை, நேதாஜி சாலை, தாலுக்கா அலுவலக சாலை, பழைய பெங்களூரு சாலை, ஏரித்தெரு உள்ளிட்ட பகுதிகளிலும், ரிங் ரோடு பகுதியிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. விழாக்காலங்கள், பண்டிகை நாட்களில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் ஓசூர் பகுதியில் போதிய அளவில் போக்குவரத்து காவலர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Stories: