நாமக்கல்லில் நள்ளிரவில் பரபரப்பு சுடுகாட்டு மண்ணை கொட்டி பொதுக்கிணற்றை மூட எதிர்ப்பு லாரியை சிறைபிடித்த மக்கள்

நாமக்கல், நவ.2:  நாமக்கல் நகராட்சி அன்பு நகரில் சுடுகாட்டு மண்ணை கொட்டி, பொது கிணற்றை மூட எதிர்ப்பு தெரிவித்த மக்கள், நள்ளிரவில் லாரி மற்றும் பொக்லைன் இயந்திரத்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல்  நகராட்சி அன்புநகர் 3வது பிரிவில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள்  உள்ளன. இங்கு 60 அடி ஆழம் கொண்ட பழைய பொதுக்கிணறு ஒன்று தண்ணீர் இல்லாமல் வறண்டு  கிடக்கிறது. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் கடைக்காரர்கள் இந்த  கிணற்றில் குப்பை மற்றும் கழிவு பொருட்களை கொட்டி வந்தனர். இதனால்  கொசுக்கள் உற்பத்தி அதிகரித்ததால் கிணற்றை  மூடும்படி, நகராட்சி அதிகாரிகளிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.  இதையடுத்து  கிணற்றை மூட கடந்த மாதம் டெண்டர் விட்டது. டெண்டர்  எடுத்த ஒப்பந்ததாரர், நேற்று கிணற்றில் மண்ணை கொட்டி மூடும் பணியை  தொடங்கினார்.  சேந்தமங்கலம் சாலையில் உள்ள சுடுகாட்டில் உள்ள  கழிவுமண்ணை, இரவோடு இரவாக லாரிகளில் அள்ளி வந்து, கிணற்றில் கொட்டப்பட்டது. இதனிடையே, நள்ளிரவில் சப்தம் கேட்டு எழுந்து வந்து பார்த்த மக்கள்,  மயானத்தில் உள்ள கழிவுமண்ணை எடுத்து வந்து, கிணற்றில் கொட்டுவதை கண்டு  அதிர்ச்சியடைந்தனர். இதனால், ஆத்திரமடைந்து லாரி மற்றும் பொக்லைனை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த நாமக்கல் போலீசார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், லாரி மற்றும்  பொக்லைனை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இதையடுத்து  சமாதானமடைந்த மக்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories: