கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல்லில் ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாமக்கல், அக்.16: 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நாமக்கல் மாவட்டம் முழுவதும் 32 கடைகளை அடைத்து ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நாமக்கல்லில், தமிழ்நாடு அரசு ரேஷன் கடை பணியாளர் சங்கத்தினர், 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். நுகர்பொருள் வாணிப கழக பணியாளர்களுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் வழங்க வேண்டும். அனைத்து விற்பனையாளர்களுக்கும் ஒரே மாதிரியான போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் துணைத்தலைவர் தண்டபாணி, செயலாளர் மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ரேஷன்கடை ஊழியர்களின் வேலைநிறுத்தம் காரணமாக, நேற்று மாவட்டம் முழுவதும் 32 கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மீதமுள்ள 700க்கும் மேற்பட்ட கடைகள் வழக்கம் போல செயல்பட்டதாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். நாமக்கல் மாவட்டத்தில், ரேஷன் கடையில் பணியாற்றும் ஊழியர்கள் 3 சங்கமாக பிரிந்து கிடக்கிறார்கள். இதனால், நேற்று ஒரு சங்கத்தினர் போராட்டம் நடத்தினாலும், பெரும்பாலான கடைகள் வழக்கம் போல இயங்கின.

யுவராஜ் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒத்திவைப்புநாமக்கல், அக்.16: யுவராஜ் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, வரும் 29ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த இன்ஜினீயர் கோகுல்ராஜ்(23) கொலை வழக்கில், கைதான சங்ககிரி தீரன் சின்னமலை கவுண்டர்கள் பேரவை நிறுவனர் யுவராஜ் மீது,  சிபிசிஐடி போலீசார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு நாமக்கல் முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது திருச்சி மத்திய சிறையில் இருந்து   யுவராஜை அழைத்து வந்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இதை தொடர்ந்து வழக்கு விசாரணையை மாஜிஸ்திரேட் தனபால், வரும் 29ம் தேதிக்கு ஒத்திவைத்தார். இதன் பிறகு, யுவராஜை போலீசார் திருச்சி மத்திய சிறைக்கு அழைத்து சென்றனர்.

Related Stories: