தோகைமலை அருகே மின்னல் தாக்கி தம்பதி 2 குழந்தைகள் பாதிப்பு 10 வீடுகளில் செட்டாப் பாக்ஸ் பழுது

தோகைமலை, அக். 10: தோகைமலை அருகே மின்னல் தாக்கி பாதிக்கப்பட்ட தொழிலாளியின் குழந்தைகளுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டம் தோகைமலை அருகே தொண்டமாங்கிணம் ஊராட்சி விருட்டிக்கவுண்டனூர் மேற்கு பகுதியில் உள்ள தமிழ்சோலையை சேர்ந்தவர் காளியப்பன் மகன் குமார்(36). இவர் தனது வீட்டின் அருகில் கொல்லுப்பட்டறை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவரது குடும்பத்தினர் அனைவரும் ஓட்டு வீட்டில் தூங்கிகொண்டிருந்தனர். அப்போது இடிமின்னலுடன் மழைபெய்து கொண்டிருந்தது. இந்நிலையில் குமார் வீட்டின் அருகே உள்ள வேப்பமரத்தில் திடீர் என்று மின்னல் தாக்கியது. இதில் வேப்ப மரத்தின் அருகில் இருந்த மின்கம்பத்தின் வழியாக குமார் வீட்டிற்கு செல்லும் மின் வயர்கள் மூலம் மின்னல் பரவி குமார் வீட்டையும் தாக்கியுள்ளது. அப்போது வீட்டில் தூங்கிகொண்டிருந்த குமார் மற்றும் குமாரின் மனைவி விஜயலட்சுமி(32), இவர்களது மகன் கவுதம்(11), மகள் ராஜேஸ்வரி(9) ஆகியோர் அலறித்துடித்து அதிர்ச்சியில் மயங்கி கிடந்தனர். சத்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து பார்த்தனர். அப்போது மின்னல் தாக்கியதில் குமார் வீட்டில் தூங்கிய அனைவரும் மயக்கமடைந்து கிடந்ததை அறிந்தனர். மேலும் குமாரின் வீட்டில் இருந்த மின் வயர்கள் அனைத்தும் தீப்பிடித்து கருகிய நிலையில் இருந்துள்ளது.

இதே போல் மின்னல் தாக்கிய அதிர்வில் குமார் வீட்டின் அருகில் மற்றொரு வீட்டிலும் கேபிள் செட்டாப் பாக்ஸ் வெடித்ததில் மணி என்பவரது மகன் கண்ணன்(19) வலது காலில் காயம் அடைந்து நடக்க முடியாமல் இருந்துள்ளார். உடனடியாக 108 ஆம்புலன்ஸ்சுக்கு தகவல் தெரிவித்து அனைவரையும் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு கவுதம் வலது கண்பார்வை பாதிக்கப்பட்ட நிலையிலும், ராஜேஸ்வரி மயக்கமடைந்த நிலையிலும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் விருட்டி கவுண்டனூரில் மின்னல் தாக்கிய அதிர்வில் 10க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த கேபிள் செட்டாப் பாக்ஸ்களும், அப்பகுதியில் உள்ள குடியிருப்புகளில் மின் வயர்கள் பழுதாகியும் உள்ளது.

இது குறித்து தோகைமலை இன்ஸ்பெக்டர் முகமது இத்ரீஸ் விசாரணை செய்து வருகிறார். மின்னல் தாக்கி சிகிச்சை பெற்று வரும் கவுதம் 6ம் வகுப்பும், ராஜேஸ்வரி 3ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

Related Stories: