பாலியல் புகார் அளித்த மாணவி வேளாண் கல்லூரியில் இருந்து நீக்கம் : கோவை வேளாண் பல்கலைக்கழகம் நடவடிக்கை

தண்டராம்பட்டு, அக்.4: தண்டராம்பட்டு அடுத்த வாழவச்சனூர் வேளாண் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் மீது, பாலியல் புகார் அளித்த மாணவி, திருச்சிக்கு செல்ல மறுத்ததால் அவரை கல்லூரியில் இருந்து நீக்கம் செய்து கோவை வேளாண்மை பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த வாழவச்சனூர் வேளாண்மை கல்லூரியில் சென்னையை சேர்ந்த 21 வயது மாணவி இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இவர் கல்லூரி உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அதற்கு உதவி பேராசிரியைகள் மைதிலி, புனிதா ஆகியோர் உடந்தையாக இருந்ததாகவும் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். உதவி பேராசிரியைகள் மைதிலி, புனிதா ஆகியோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதற்கிடையில், பாலியல் புகார் அளித்த மாணவிக்கு தொடர்ந்து அதே கல்லூரியில் படிக்க, கல்லூரி பேராசிரியர்கள், சக மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து, புகார் அளித்த மாணவி திருச்சி வேளாண் கல்லூரியில் கல்வியை தொடர, கல்லூரி நிர்வாகம் சார்பில் அனுமதி கடிதம் வழங்கப்பட்டது. ஆனால், அதனை மாணவி பெற்றுக் கொள்ளாமல், வாழவச்சனூரிலேயே தொடர்ந்து படிப்பதாக தொரிவித்து வந்தார். இந்நிலையில் திருச்சிக்கு செல்ல செப்டம்பர் 30ம் தேதி வரை மாணவிக்கு காலக்கெடு வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், காலக்கெடு முடிந்தும் மாணவி, திருச்சி வேளாண் கல்லூரிக்கு செல்லாததால், கல்லூரியில் இருந்து நீக்கம் செய்து, கோவை வேளாண்மை பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) சுதாகர் உத்தரவிட்டார். மேலும், அதற்கான நோட்டீஸ் கல்லூரி முதல்வருக்கு அனுப்பிவைக்கப்பட்டது. நேற்று முன்தினம் விடுமுறையை தொடர்ந்து, நேற்று வழக்கம்போல் கல்லூரி செயல்பட்டது. ஆனால், சம்பந்தப்பட்ட மாணவி, கல்லூரிக்கு வரவில்லை. இதனால் அந்த மாணவியை நீக்கம் செய்ததற்கான நோட்டீஸ் கல்லூரி தகவல் பலகையில் ஒட்டப்பட்டது.

Related Stories: