பாலியல் புகார் கூறியதால் கள ஆய்வுக்கு அழைத்து செல்லவில்லை : மாணவி பரபரப்பு குற்றச்சாட்டு

தண்டராம்பட்டு, செப்.6: தண்டராம்பட்டு அருகே வாழவச்சனூர் வேளாண் கல்லூரியில் உதவி பேராசிரியர் மீது பாலியல் புகார் தெரிவித்ததால் தன்னை கள ஆய்வுக்கு அழைத்து செல்லவில்லை என்றும், தன்னை கல்லூரி நிர்வாகம் புறக்கணிப்பதாகவும் பாதிக்கப்பட்ட மாணவி குற்றம்சாட்டியுள்ளார்.திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு தாலுகா வாழவச்சனூர் அரசு வேளாண் கல்லூரியில் படிக்கும் சென்னையை சேர்ந்த 21 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக உதவி பேராசிரியர் தங்கபாண்டியன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.வேளாண் கல்லூரி மாணவியின் பாலியல் புகார் தொடர்பாக கோவை வேளாண் பல்கலைக்கழகம் உத்தரவுப்படி பல்கலைக்கழக இயக்குனர் டாக்டர் சாந்தி தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் விசாரணை நடத்தினர். இந்நிலையில், பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவி புகார் தெரிவித்ததால் கல்லூரியில் சக மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் அவரை புறக்கணிப்பதாக புகார் எழுந்துள்ளது.

நேற்று முன்தினமும் காலை 7.30 மணிக்கு வழக்கம்போல் மாணவி வகுப்புக்கு சென்றார். அப்போது வகுப்புக்கு வந்த பேராசிரியை, மாணவியை பார்த்தவுடன் பாடம் நடத்தாமல் வகுப்பைவிட்டு வெளியேறினார். மேலும், வகுப்பில் இருந்த 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை வகுப்பை விட்டு வெளியே வருமாறு கூறி அழைத்து சென்றார்.இதையறிந்த கம்யூனிஸ்டு கட்சியினர் சம்பந்தப்பட்ட பேராசிரியைக்கு எதிராக மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் வாணாபுரம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து பேராசிரியை மீண்டும் வகுப்புக்கு சென்று பாடம் நடத்தினார்.இந்நிலையில், நேற்று காலை 7.30 மணிக்கு கல்லூரிக்கு பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவி வந்ததார். அப்போது வகுப்பில் உள்ள மாணவ, மாணவிகளை மட்டுமே விவசாய நிலத்தை கள ஆய்வு செய்வதற்காக 7.25 மணிக்கு பேராசிரியர்கள் அழைத்து சென்றது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த மாணவி, இதுகுறித்து கல்லூரி டீனிடம் கேட்டுள்ளார். அதற்கு டீன் காலை 9.30 மணியளவில் மீண்டும் கல்லூரி வரும் மாணவ, மாணவிகளுடன் கள ஆய்வு செல்லலாம் என்றார். இதையடுத்து காலை 10 மணிக்கு மாணவியும் களஆய்விற்கு சென்றார்.இதுகுறித்து பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட மாணவி, ‘கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து என்னை புறக்கணித்து பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரிகிறது. இதனால்தான் கள ஆய்வுக்கு அழைத்து செல்லவில்லை’ என்றார். மாணவியின் இந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: