ஜெயங்கொண்டத்தில் ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து குழந்தைகளை மீட்க உறுதிமொழி அங்கன்வாடி பணியாளர்கள் ஏற்பு

ஜெயங்கொண்டம்,செப்.5: தேசிய ஊட்டச்சத்து வார விழாவை முன்னிட்டு ஜெயங்கொண்டத்தில் குழந்தைகள் பெண்கள் இளைஞர்கள் ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து மீட்டெடுக்க விழிப்புணர்வு உறுதிமொழி மற்றும் பேரணி நடைபெற்றது. நிகழ்ச்சிகளுக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மகேஸ்வரி தலைமை வகித்தார். ஜெயங்கொண்டம் ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முருகானந்தம் மற்றும் மேற்பார்வையாளர் வாசுகி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியை முன்னிட்டு அங்கன்வாடி பணியாளர்களின் உணவுப் பொருட்கள் கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது கண்காட்சி மற்றும் பேரணியை ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தணிக்கை கஸ்தூரி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியின்போது ஊட்டச்சத்து குறைபாட்டிலிருந்து குழந்தைகள் இளைஞர்கள் பெண்கள் ஆகியோரை காப்போம் என உறுதிமொழி அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

பின்னர் ஒன்றிய அலுவலகத்தில் இருந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியில் ஊட்டச்சத்து அங்கன்வாடி பணியாளர்கள் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி கோஷமிட்டவாறு சென்றனர். பேரணியானது ஒன்றிய அலுவலகத்தில் துவங்கி அண்ணாசிலை, கடைவீதி வழியாக சென்று மீண்டும் ஒன்றிய அலுவலகத்தில் முடிவடைந்தது. பேரணியில் ஜெயங்கொண்டம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 155 அங்கன்வாடி மையங்களை சேர்ந்த பணியாளர்கள் மற்றும் சுய உதவிக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர். முன்னதாக நிகழ்ச்சிக்கு மேற்பார்வையாளர் வசந்தா வரவேற்றார். இறுதியில் வளர்மதி நன்றி கூறினார்.

Related Stories: