அரியலூர் பதிவுத்துறை அலுவலகத்தில் லஞ்சம் கேட்ட பதிவாளர் மீது நடவடிக்கை கோரி முற்றுகை

அரியலூர், ஜூலை 26: அரியலூரில் லஞ்சம் கேட்ட மாவட்ட பதிவாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வழக்கறிஞர்கள் பதிவுத்துறை அலுவலகத்தை  முற்றுகையிட்டன். அரியலூரில் அமைந்துள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் நடத்தப்படுவது வழக்கம். இதில் பாகப்பிரிவினை, சொத்துப்பிரச்னை உள்ளிட்ட சில வழக்குகளில் இருதரப்பிற்கும் இடையே சமரசம் ஏற்படுத்தி வழக்கை திரும்பப்பெற்றுக் கொள்வதும், இதுபோன்ற சமரசம் முறையாக பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்டு அதற்கான ஆவனம் கொடுக்கப்படுவதும் வழக்கம். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் நீதிமன்றத்தில் இருதரப்பினரிடையே பாகப்பிரிவினையில் ஏற்பட்ட சமரசத்தை மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு செய்த வழக்கறிஞர் மனோகரன் அதற்கான ஆவனத்தை கேட்டுள்ளார்.

அப்போது மாவட்ட பத்திர பதிவாளர் ரமேஷ் லஞ்சம் கேட்டதாகவும் ஆவனத்தை கொடுக்காமல் அலையவிட்டு தரக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வழக்கறிஞர்கள் மாவட்ட பதிவுத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது இடைத்தரகர்களை வைத்து பத்திரங்களை பதிவு செய்வதாகவும், பொதுமக்களிடம் பத்திரப்பதிவிற்கு அதிகளவில் லஞ்சம் கேட்பதாகவும் குற்றம் சாட்டி வழக்கறிஞர்களை தரக்குறைவாக பேசிய மாவட்ட பதிவாளரை கைது செய்ய வேண்டும், பத்திர பதிவு அலுவலகத்திலுள்ள இடைத்தரகர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

Related Stories: