ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்த விதம் வேதனை அளிக்கிறது: மம்தா பானர்ஜி பேட்டி

கொல்கத்தா: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்த விதம் வேதனை அளிக்கிறது என மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக கூறப்படும் ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்ஜாமீன் ரத்து செய்யப்பட்ட நிலையில் மாயமான முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை சிபிஐ நேற்றிரவு அதிரடியாக கைது செய்தது. 27 மணி நேர தலைமறைவுக்குப் பிறகு காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் பேட்டி அளித்து விட்டு வீடு திரும்பியதும், சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து அவரை சுற்றிவளைத்து காரில் ஏற்றிச் சென்றனர். அவரிடம். சிபிஐ தலைமை அலுவலகத்தில் விடிய விடிய தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி இது தொடர்பாக பேசுகையில்; ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்த விதம் வேதனை அளிக்கிறது. ப.சிதம்பரம் பொருளாதார நிபுணர், முன்னாள் உள்துறை மந்திரியும், நிதி மந்திரியாக பதவி வகித்தவர். அவர் கைது செய்யப்பட்ட விதம் வேதனை அளிக்கிறது. நமது நாட்டில் ஜனநாயக முறை நசுக்கப்பட்டு வரும் நிலையில், அதை காப்பாற்ற நீதித்துறை முன்வரவில்லை என குற்றம் சாடினார்.

Related Stories: