நியூசிலாந்தில் பயங்கரம்: 2 மசூதிகள் மீது மர்மநபர்கள் துப்பாக்கி சூடு - 49 பேர் பலி

கிறிஸ்ட்சர்ச்: நியூசிலாந்தில் கிறிஸ்ட்சர்ச்சில் இரண்டு மசூதிகள் மீது மர்மநபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இந்த துப்பாக்கி சூட்டில் 49 பேர் பலியானார்கள். நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் பகுதியில் உள்ள  மஸ்ஜித் அல் நூர் மசூதி மிகவும் புகழ் பெற்றது. நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் வழக்கம்போல் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர் திரண்டு தொழுகை நடத்திக்கொண்டு இருந்தனர். அப்போது திடீரென உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அங்கிருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினர். இதனால் அங்கிருந்தவர்கள் அலறியடித்து ஓடினார்கள். இங்கு நடந்த துப்பாக்கி சூட்டில் சுமார் 41 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமடைந்தனர்.

இதேபோல் இங்கிருந்து சுமார் 5 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ள லின்வுட் ஆவ் மசூதிக்குள்ளும் புகுந்த மர்மநபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்து விரைந்த போலீசார் துப்பாக்கி சூடு நடந்த மசூதியை சுற்றி வளைத்தனர். துப்பாக்கி சூடு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் மசூதிக்குள் இருந்து வெடிக்காத நிலையில் சக்திவாய்ந்த 2 வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டு செயலிழக்க செய்யப்பட்டது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், “அடுத்தடுத்து இரண்டு மசூதிகளில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை பார்க்கும்போது யாரும் மசூதிக்கு செல்லக்கூடாது என் எச்சரிக்கை விடுப்பதாக தெரிகிறது” என்றார். நியுசிலாந்து பிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் கூறுகையில், “ இந்த நாள் நியூசிலாந்து வரலாற்றில் மிகவும் மோசமான நாளாகும். இது தீவிரவாத தாக்குதல் என தெளிவாக தெரிகிறது. இது நன்கு திட்டமிடப்பட்ட தாக்குதல். இந்த தாக்குதல் சம்பவத்தில் எத்தனை பேர் ஈடுபட்டனர் என்பது தெரியவில்லை. ஆனால் 3 பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்” என்றார்.

ஆஸ்திரேலிய தீவிரவாதி

தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரன்் டன் டாரன்ட் என தெரியவந்துள்ளது. இது குறித்து சிட்னியில் பேசிய ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன்,  ’’இதுபோன்ற தாக்குதல் சம்பவத்தில் ஈடுபடுபவர்கள் பயங்கரவாதிகள், வலது சாரி மற்றும் மோசமான தீவிரவாதிகள்” என விமர்சித்தார்.

நேரடி ஒளிபரப்பு

இதனிடையே அல் நூர் மசூதியில் துப்பாக்கி சூடு நடத்திய ஆஸ்திரேலிய தீவிரவாதி அந்த காட்சியை தலையில் பொருத்தப்பட்ட, கேமிரா மூலம் தனது பேஸ்புக் அக்கவுண்ட்டில் நேரடியாக ஒளிபரப்பி உள்ளான். இதில் அவன் ஆண்கள், பெண்கள், குழந்தைகளை கண்மூடித்தனமாக மிக அருகில் துப்பாக்கியால் சுடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த வீடியோ காட்சியை சமூக இணையதளங்களில் பகிர வேண்டாம் என பொதுமக்களுக்கு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

9 இந்தியர்கள் மாயம்

`நியூசிலாந்து இனவெறி தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த 9 பேர் காணாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ‘இந்தியர்கள் உதவிக்கு 021803899 அல்லது 021850033 என்ற எண்களை தொடர்பு கொள்ளலாம்’ என நியூசிலாந்துக்கான இந்திய தூதர் சஞ்சீவ் கோலி டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். தாக்குதலில் 2 இந்தியர்கள் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த ஒருவர் உயிருக்காக போராடி வருவதாக கூறப்படுகிறது.

மோடி, டிரம்ப் கண்டனம்

`கிறிஸ்ட்சர்ச்சில் நடந்த தீவிரவாத கொடூர தாக்குதலில் எண்ணற்ற அப்பாவிகள் பலியானது மிகுந்த வருத்தமும் பயங்கர அதிர்ச்சியும் அளிக்கிறது. தீவிரவாத தாக்குதல், தீவிரவாத நடவடிக்கைகள், வன்முறைகளுக்கு ஆதரவு அளிப்பதை இந்தியா வன்மையாக கண்டிக்கிறது’ என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில், `நியூசிலாந்தில் மசூதியில் நடத்தப்பட்ட படுகொலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல், அனுதாபங்கள் ’ என பதிவிட்டுள்ளார்.

உயிர்தப்பிய வங்கதேச வீரர்கள்

வங்கதேசத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பதற்காக நியூசிலாந்தின் கிறிஸ்சர்ச்க்கு வந்துள்ளனர். வீரர்கள் குழு பேருந்து மூலம் மசூதிக்குள் நுழைய முயன்றபோது துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அங்கிருந்து பாதுகாப்பாக அவர்கள் வெளியேறினார்கள். அவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: