உலக கோப்பை தொடருடன் ஓய்வு பெறுகிறார் டுமினி

ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்ரிக்க வீரர் ஜீன் பால் டுமினி, இங்கிலாந்தில் நடைபெற உள்ள ஐசிசி உலக கோப்பை தொடருடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2004ம் ஆண்டு தென் ஆப்ரிக்க அணியில் அறுமுகமான டுமினி (34 வயது), இதுவரை 46 டெஸ்ட் போட்டியில் 2013 ரன் (அதிகம் 166, சராசரி 32.85, சதம் 6, அரை சதம் 8) மற்றும் 42 விக்கெட் வீழ்த்தியுள்ளார். கடந்த 2017ம் ஆண்டுடன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற அவர், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். இந்த நிலையில், இங்கிலாந்தில் நடைபெற உள்ள உலக கோப்பை தொடருடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக நேற்று அவர் அறிவித்தார்.

இதுவரை 193 ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ள டுமினி 5,047 ரன் (அதிகம் 150*, சராசரி 37.38, சதம் 4, அரை சதம் 27) மற்றும் 68 விக்கெட் எடுத்துள்ளார். டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே தென் ஆப்ரிக்க ஸ்பின்னர் இம்ரான் தாஹிர், வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் கிறிஸ் கேல் ஆகியோர் உலக கோப்பையுடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: