விவசாய வருமானத்துக்கு வேட்டு வைத்ததால் பண வீக்கம் குறைந்தாலும் கொண்டாட வழியில்லை: தேர்தல் நேரத்தில் வந்தது தலைவலி

புதுடெல்லி: மத்திய அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, பண வீக்கம் ஏறக்குறைய பாதியாக குறைந்து விட்டது. ஆனாலும், விவசாய வருமானம் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த சாதனையை கொண்டாடவும் முடியாமல், வருவாய்  பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோபத்தையும் எதிர்கொள்ள வேண்டிய நிலை மத்திய அரசுக்கு ஏற்பட்டுள்ளது. விலைவாசியை கட்டுப்படுத்தி, விவசாய வருவாயையும் உயர்த்துவதாக 2014ம் ஆண்டு பாஜ உறுதி அளித்தது. மத்தியில் ஆட்சிப்பொறுப்பு ஏற்ற பிறகு இதற்கான செயல் திட்டங்கள் வகுக்கப்பட்டன. இதன்படி பண வீக்கம்  படிப்படியாக குறைக்கப்பட்டு வந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதத்துக்கான சில்லரை விலை பண வீக்கம் 2.57 சதவீதமாக உயர்ந்து விட்டது. இதற்கு முன்பு ஜனவரியில் இது 1.97 சதவீதம்தான்.  பண வீக்கம் சற்று உயர்ந்தாலும், 2014ம் ஆண்டு ஒப்பிடுகையில் ஏறக்குறைய பாதிதான். 2014ல் பண வீக்கம் சுார் 4.8 சதவீதமாக இருந்தது. 2013க்கு முன்பு சராசரி பண வீக்கம் 10 சதவீதம் வரை சென்றது. ஒவ்வொரு முறையும்  பண வீக்கம், அதாவது விலைவாசி குறையும்போதெல்லாம் மத்திய அரசுக்கு உற்சாக கொண்டாட்டமாகவே இருக்கும். இதை தங்கள் சாதனையாக பிரசாரம் செய்வார்கள்.

 ஆனால், தற்போதைய பாஜ அரசுக்கு இதுவே தலைவலியாக அமைந்து விட்டது. காரணம் விவசாய வருவாய் குறைந்ததுதான். 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பு ஆக்குவதாக மத்திய அரசு உறுதி  அளித்துள்ளது. ஆனால், இதற்கு எதிர்மாறாக விவசாய வருவாய் குறைந்து விட்டது. விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் திண்டாடி வருகின்றனர்.   நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 80 லட்சம் பேர் விவசாய வருவாயைத்தான் சார்ந்திருக்கின்றனர்.     ஏற்கெனவே டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களை நடத்தி வந்தனர். விவசாயிகளிடம்  இருந்து மத்திய அரசு கொள்முதல் செய்தாலும் எதிர்பார்த்த பலன் விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை. உரிய விலை கிடைக்காத ஆத்திரத்தில் விளை பொருட்களை வீணாக கொட்டும் அளவுக்கு விவசாயிகள் விரக்தியின்  விளிம்புக்கே சென்று விட்டனர். இதுகுறித்து பொருளாதார வல்லுநர்கள் சிலர் கூறியதாவது:  மத்திய அரசு விலைவாசியை கட்டுப்படுத்துவதில் சிறப்பாகவே வெற்றி கண்டு விட்டது. ஜிஎஸ்டி அமல்படுத்தியதும் விலை வாசி சரிவுக்கு காரணம். விவசாய பொருட்களை சந்தைப்படுத்துவதில் புதிய சீரமைப்புகளால் பதுக்கல்  தடுக்கப்பட்டது. தரகர்களின் தலையீடுகள் குறைக்கப்பட்டன. விளைச்சல் பெருகியதால் சந்தைக்கும் வரத்து அதிகரித்து விட்டது.

 இருப்பினும் அதற்கான விலையை கொடுக்க வேண்டிய தருணம் இது. விவசாய வருமானம் குறைந்ததால் விலைவாசி குறைவை கொண்டாட முடியாத நிலைக்கு மத்திய அரசு சென்று விட்டது. இது தேர்தலில் எதிரொலிக்க  வாய்ப்புகள் உள்ளன. அதேநேரத்தில், பண வீக்கம் குறைந்ததால் கடந்த பிப்ரவரி மாதம் ரிசர்வ் வங்கி குறுகிய கால கடன் வட்டியை குறைத்தது. ரிசர்வ் வங்கி நிர்ணயித்த இலக்கான 4 சதவீதத்துக்கும் கீழ் பண வீக்கம்  குறைந்ததால் அடுத்த மாதம் நடக்க உள்ள ரிசர்வ் வங்கி கூட்டத்திலும் வட்டி விகிதம் குறைக்கப்பட வாய்ப்புகள் உள்ளன என்றனர்.

* உணவு, தானியங்கள் விலை குறைந்ததால் பண வீக்கம் முன்பு இருந்ததை விட பாதியாக குறைந்து விட்டது. ஆனால், விவசாயிகளின் வருவாய் உயர்வு கனவாகவே போய்விட்டது.

*  நாட்டின் மொத்த மக்கள் தொகையில் சுமார் 80 லட்சம் பேர் விவசாய வருமானத்தைதான் சார்ந்துள்ளனர்.

* ஏற்கெனவே கரும்பு விவசாயிகள் நிலுவை பெரும் பிரச்னையாக உள்ளது. இந்த சூழ்நிலையில் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்காதது மத்திய அரசுக்கு தேர்தல் நேரத்தில் பெரிய தலைவலியை ஏற்படுத்தி  விட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: