பல கட்ட போராட்டம் நடத்தியும் பயனில்லை ₹100 கோடி வழங்காமல் ஏமாற்றும் சர்க்கரை ஆலை

* கடமையை செய்யாமல் அரசு அலட்சியம்

* 10 ஆயிரம் விவசாயிகள் வாழ்வாதாரம் பாதிப்பு

விருத்தாசலம் அருகே உள்ள ஏ.சித்தூரில் திருஆரூரான்  சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. கடந்த 2003ம் ஆண்டு  தொடங்கப்பட்ட இந்த தனியார் சர்க்கரை ஆலையில்  விருத்தாசலம், வேப்பூர், மங்கலம்பேட்டை, சிறுபாக்கம்,  எலவனாசூர்கோட்டை உள்ளிட்ட பல கோட்டங்களிலிருந்து   விவசாயிகள் கரும்புகளை கொண்டு  வருகின்றனர். இதன்மூலம் தினமும் 3 ஆயிரத்து 500 டன் கரும்பு  அரவை நடைபெற்று வருகிறது.

சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் 18 ஆயிரம் ஏக்கர்  நிலப்பரப்பில் ஆண்டு ஒன்றுக்கு 5.5 லட்சம் டன் அரவை  செய்து பயனடைந்து வந்தனர். இதில் ஜனவரி முதல் மே வரை  முதல் அரவை பருவமும், செப்டம்பர், அக்டோபர், நவம்பர்  ஆகிய மூன்று மாதங்கள் சிறப்பு அரவை பருவமும்  நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கடந்த 5 வருடங்களாக  விவசாயிகளுக்கு தரவேண்டிய சுமார் 100 கோடி ரூபாய் கரும்பு  பணத்தை தராமல், ஆலை நிர்வாகம், 2 ஆண்டுகளாக  இயங்காமல் மூடிக்கிடக்கிறது. ஆலைக்கு  தேவையான அளவு கரும்பு அனுப்பிய விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு  நலிவடைந்துள்ளது.

மேலும் கடந்த 2016-17 மற்றும் 2017- 18ம்  ஆண்டிற்கான கரும்பு நிலுவைத் தொகை (எப்ஆர்பி) சுமார் ரூ.25  கோடி மற்றும் காலதாமதமான கரும்பிற்கு 15 சதவீத வட்டி ரூ.8 கோடி,  மேலும் நான்கு ஆண்டுகளாக  மாநில அரசு அறிவித்த  பரிந்துரை விலை சுமார் ரூ.40 கோடி, ஆலை நிர்வாகம் 2010 முதல்  2015 வரை இந்த மானியத்தொகை ரூ.4 கோடி, 2017-18ம்  ஆண்டிற்கான தமிழக அரசு அறிவித்த 2018-19 நிதிநிலை  அறிக்கையில் டன்  ஒன்றுக்கு ரூ.200 வீதம் 25 ஆயிரம் டன்  416  விவசாயிகளுக்கு சுமார் ரூ.55 லட்சம் வரை வழங்கப்படாமல் உள்ளது. மேலும், போக்குவரத்து வாடகை சுமார் ரூ.5 கோடி  ரூபாய் என மொத்தம் சுமார் ரூ.100 கோடி பாக்கி வைத்துள்ளது.

இதுமட்டுமல்லாமல் கருவேப்பிலங்குறிச்சி, விருத்தாசலம், கழுதூர்  ஸ்டேட் வங்கி மற்றும் கார்ப்பரேட் வங்கிகளில் விவசாயிகள்  பெயரில் முறைகேடாக வங்கி கணக்கு  தொடங்கி விவசாயிகள் பெயரில் ஆலை நிர்வாகம் பல கோடி ரூபாய் வங்கி கடன் பெற்றுள்ளது.  இதுகுறித்து விவசாயிகள் பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் அரசும், நிர்வாகமும் கண்டுகொள்ளாமல்  அலட்சியம் காட்டி வருவதால் கரும்பு விவசாயிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். வங்கி கடன் மற்றும் அடமானம் வைத்த நகைகளை மீட்க முடியாமலும் சிரமப்பட்டு வருகின்றனர்.

விவசாயிகளின் கரும்பு நிலுவை தொகையை கேட்டு தேசிய  தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில தலைவர்  அய்யாக்கண்ணு தலைமையில் விருத்தாசலத்தில் கடந்த  ஜனவரி 7ம் தேதி முதல் 12ம் தேதி வரை பல போராட்டங்கள் நடத்தினர்.  அப்போது விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் ஜனவரி 23ம் தேதி ஒரு குறிப்பிட்ட தொகை அளிப்பதாகவும், இல்லையெனில் 31.1.2019  முன் தேதியிட்ட ஒரு கோடி ரூபாய்க்கான காசோலை வழங்குவதாக ஆலை நிர்வாகம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அதற்கான எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை. போராட்டத்தை ஒடுக்க மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தி பொய்யான வாக்குறுதி அளிக்கப்பட்டதாக விவசாயிகள் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து அய்யாக்கண்ணு  கூறுகையில், அரசு தனது கடமையை செய்யாமல் ஏமாற்றி வருகிறது.  அரசு ஊழியருக்கு ஒரு மாதம் சம்பளம் தரவில்லை என்றாலும், சம்பள உயர்வுக்காகவும் போராட்டம் வெடிக்கிறது. ஆனால் 24 மாதங்களாக அனுப்பிய  கரும்புக்கான  பணத்தை கேட்டும், ஆலை நிர்வாகம் தர  மறுத்து வருகிறது. அப்பாவி  விவசாயிகள் பெயரில் பல லட்சம் ரூபாய் ஆலை நிர்வாகம்  கடன் பெற்றுள்ளது. இதுகுறித்து அரசு எந்த நடவடிக்கையும்  எடுக்கவில்லை. முறைகேடாக  விவசாயிகளின் பெயரில் கடன் வழங்கியுள்ள வங்கி அதிகாரிகள்  மீதும்,  ஆலை நிர்வாகத்தின் மீதும் சிபிஐ வழக்கு தொடர  வேண்டும் என்றார்.

மாநில செயலாளர் சாத்துக்குடல் சக்திவேல் கூறுகையில், வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும்  சர்க்கரை துறை இயக்குனர் நடத்திய பேச்சுவார்த்தையின் போது, திரு ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாக  இயக்குனர், நேரடியாக வந்து 15.2.2019க்குள் நிலுவைத்தொகை வழங்குவதாக எழுத்துப் பூர்வமாக உறுதி அளித்தும்  இதுவரை வழங்கவில்லை. முறைகேடான வங்கி கடனால், விவசாயிகளின்  வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

அதனால்  விவசாயிகளின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில்  உள்ளது. எனவே தமிழக அரசு கூட்டுறவுத்துறை சர்க்கரை  ஆலைகளுக்கு நிதி வழங்கியது போல, பாதிக்கப்பட்டுள்ள  விவசாயிகளின் பொருளாதாரத்தை பாதுகாக்க, பாக்கி  வைத்துள்ள ஆலைகளுக்கு தமிழக அரசின் நிதி வழங்கி  பாதுகாக்க வேண்டும் என்றார்.தமிழகம் மற்றும் புதுவை மாநில கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் கார்மாங்குடி வெங்கடேசன் கூறுகையில், கரும்பு விவசாயிகள்  பயிர் செய்த   தங்களது கரும்பு பணத்தை உடனடியாக வழங்கும்  ஆலைக்கு அனுப்ப விரும்பியும்  கூட ஆலை நிர்வாகமும்,  சர்க்கரை துறை இயக்குனரும் உரிய வழிவகை செய்யவில்லை.

இதனால் தனியார் கரும்பு  வியாபாரிகள்,  விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் அடிமாட்டு விலைக்கு  கரும்பை வாங்கி தனியார் ஆலைக்கு விற்று கொள்ளை லாபம்  பெற்றார்கள். வருங்காலங்களில்  இந்த தவறுகள் நடக்காத வகையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேல்   பயிரிட போகிற கரும்புக்கு உரிய  பதிவு செய்வதற்கும், பயிர் கடன் பெறவும்   மாநில அரசு உரிய நடவடிக்கையை  மாவட்ட நிர்வாகம் மூலம்  எடுக்க வேண்டும் என்றார்.

விவசாயி மேமாத்தூர் அண்ணாதுரை கூறுகையில், ஆலை நிர்வாகம் முறைகேடாக வாங்கிய வங்கி கடனுக்காக ஒவ்வொரு விவசாயிகள் வீட்டிற்கும்  பணத்தை கட்டச் சொல்லி நோட்டீஸ்  வருகிறது. அப்போது தான், விவசாயிகளுக்கு தெரியும். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். விவசாயி எருமனூர் சரவணன் கூறுகையில், தற்போது கரும்பு பயிர் செய்ய முடியாததால் விவசாயிகள்  கட்டிட வேலைகளுக்கும் அண்டை மாநிலங்களுக்கும்  வேலைக்கு செல்கின்றனர்.

மேலும் 100 நாள்  வேலை திட்டத்திற்கு சென்று தங்களது வாழ்வாதாரத்தை  காப்பாற்றி வருகின்றனர். விவசாயிகளுக்கு தரவேண்டிய  பணம் முழுவதையும் ஆலை நிர்வாகம் தந்துவிட்டு ஆலையை  நடத்த வேண்டும். இல்லை எனில் தமிழக அரசு ஆலையை  எடுத்து நடத்த வேண்டும். இப்பகுதி  விவசாயிகளையும், விவசாயத்தையும் காப்பாற்றிட ஆலை  நிர்வாகத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: