திண்டுக்கல்-லோயர்கேம்ப் சாலை பணி மீண்டும் துவங்குகிறது : 7 ஆண்டுகளுக்குபின் விடிவுகாலம் பிறந்தது

தேனி: திண்டுக்கல்-லோயர்கேம்ப் தேசிய நெடுஞ்சாலை பணிகள் 7 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தொடங்க உள்ளதாக, தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி தெரிவித்தார். திண்டுக்கல்லில் இருந்து வத்தலக்குண்டு, பெரியகுளம், தேனி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர் வழியாக லோயர்கேம்ப் வரை கடந்த 2010ம் ஆண்டு வரை 10 மீட்டர் சாலையே இருந்தது. இச்சாலை தேசிய நெடுஞ்சாலைத் துறை மூலம் பராமரிக்கப்பட்டு வந்தது. மிக குறுகியதாக இருந்ததால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்தது. எனவே, இச்சாலையை தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் நான்கு வழிச்சாலையாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்தது.

இதன்படி கடந்த 2010ம் ஆண்டு நான்கு வழிச்சாலைக்காக நிலம் சர்வே செய்யப்பட்டது. இதில் வத்தலக்குண்டு, தேவதானப்பட்டி, பெரியகுளம், தேனி, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம், கூடலூர் ஆகிய இடங்களில் ஊருக்குள் சாலை செல்லாமல் புறவழியாக செல்லும் வகையில் சர்வே செய்யப்பட்டு நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதற்காக நிலம் கையகப்படுத்துவதற்காக மாவட்ட வருவாய் அலுவலர் நியமிக்கப்பட்டு பணிகள் துரிதமாக நடந்தது. நிலம் கையகப்படுத்தப்பட்டதையடுத்து, திண்டுக்கல்லில் இருந்து லோயர் கேம்ப் வரை 133 கிமீ நீளத்திற்கு நான்கு வழிச்சாலை பணி துவங்கியது. ஆரம்பத்தில் நான்கு வழிச்சாலை என்றபோதும் பின்னர் திட்டம் மாற்றப்பட்டு 13 மீட்டருடன் கூடிய இருவழிச்சாலையாக போடப்பட்டது.

மொத்தமுள்ள 133 கிமீ தூரத்தில் 90 கிமீ தூரத்திற்கு மட்டுமே சாலைகள் போடப்பட்டது. இதன்பிறகு பெரியகுளம் அருகே எண்டப்புளியில் இருந்து வீரபாண்டி வரை, சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் புறவழிச்சாலை பணிகள் முடிவடையாமல் நின்று போனது. சாலைகள் பணி நிறைவடைந்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டதால் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் போடப்பட்ட 90 கிமீ தூர சாலையில் பல இடங்கள் சேதமடைந்து விட்டன. எனவே, விடுபட்ட 43 கிமீ சாலையை உடனே அமைக்க வேண்டும், ஏற்கனவே செயல்பாட்டுக்கு வந்து சிதிலமடைந்துள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய தொழில்நுட்ப துணை பொது மேலாளர் முத்துடையாரிடம் கேட்டபோது, ‘‘திண்டுக்கல்லில் இருந்து லோயர் கேம்ப் வரையிலான 133 கிமீ நீளமுள்ள சாலை அமைக்கும் பணியில் ஏற்கனவே, போடப்பட்ட 90 கிமீ சாலையை சீரமைக்கவும், விடுபட்ட 43 கிமீ சாலையை புதிதாக அமைக்கவும் ரூ.300 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு டெண்டர் கோரப்பட்டுள்ளது. டிசம்பர் மாதம் டெண்டர் ஏலம் நடக்கிறது. இப்பணி முடிவடைந்ததும் 18 மாதங்களில் அனைத்து பணிகளும் நிறைவடைந்து விடும். விடுபட்ட புறவழிச்சாலை பணிகளும் நிறைவடைந்து விடும். தற்போது செயல்பாட்டில் உள்ள சாலையும் சீரமைக்கப்பட்டு புதிய தார் சாலை அமைக்கப்படும். இதுமட்டுமல்லாமல் திட்டமிட்டபடி இச்சாலைப்பணிகள் நிறைவடைந்ததும், ஏற்கனவே, திட்டமிட்டபடி, நான்கு வழிச்சாலை பணிகளும் விரைவில் துவங்கப்பட உள்ளது’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: