விஜய் ஹசாரே டிராபி முதல் அரை இறுதியில் மும்பை - ஐதராபாத் மோதல்

பெங்களூரு: விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டித் தொடரின் முதல் அரை இறுதியில் மும்பை - ஐதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன. பெங்களூரு எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெறும் இப்போட்டி காலை 9.00 மணிக்கு தொடங்குகிறது. தேசிய அளவிலான 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான விஜய் ஹசாரே டிராபி தொடரில் மொத்தம் 37 அணிகள் 4 பிரிவுகளாக லீக் சுற்றில் மோதின. இந்த சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பிடித்த அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின.  சி பிரிவில் இடம் பெற்றிருந்த தமிழக அணி 9 போட்டியில் 5 வெற்றி, 4 தோல்வியுடன் 20 புள்ளிகள் பெற்று (5வது இடம்) ஏமாற்றத்துடன் வெளியேறியது.

கால் இறுதி ஆட்டங்களில் வெற்றிகளைக் குவித்த மும்பை, டெல்லி, ஜார்க்கண்ட், ஐதராபாத் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன. பெங்களூருவில் இன்று நடைபெறும் முதல் அரை இறுதியில் மும்பை - ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. டெல்லி - ஜார்க்கண்ட் மோதும் 2வது அரை இறுதி ஆட்டம் நாளை நடைபெற உள்ளது. ரோகித் ஷர்மா தலைமையிலான மும்பை அணியில் இளம் தொடக்க வீரர் பிரித்வி ஷா விளையாட உள்ளது எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. கால் இறுதியில் மும்பை அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் பீகார் அணியை வீழ்த்தியதால் மிகுந்த உற்சாகமாக உள்ளது. அந்த போட்டியில் 23 வயது வேகப் பந்துவீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். ஸ்பின்னர் ஷாம்ஸ் முலானி 3 விக்கெட் கைப்பற்றினார்.

அனைத்து வகையிலும் மிக வலுவான அணியாக உள்ள மும்பைக்கு, அம்பாதி ராயுடு தலைமையிலான ஐதராபாத் அணி கடும் நெருக்கடி கொடுக்க காத்திருக்கிறது. ஆந்திர அணியுடன் நடந்த கால் இறுதியில் 14 ரன் வித்தியாசத்தில் போராடி வென்ற ஐதராபாத் அணி, பேட்டிங்கில் சந்தீப், அம்பாதி ராயுடு, அகர்வால், ரோகித் ராயுடு, சுமந்த் ஆகியோரை பெரிதும் நம்பியுள்ளது. ரவி கிரண், முகமது சிராஜ் வேகமும் மும்பை பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும். இரு அணிகளுமே பைனலுக்கு முன்னேறும் முனைப்புடன் வரிந்துகட்டுவதால், ஆட்டம் விறுவிறுப்பாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: