வாலாஜாபாத், பிப்.12: காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ்ஒட்டிவாக்கம் ஊராட்சியில் 3000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மேலும், ஊராட்சியில் ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஆரம்பப்பள்ளி, அங்கன்வாடி மையம், நூலகம், ஊராட்சி மன்ற அலுவலகம், கிராம நிர்வாக அலுவலகம், இ-சேவை மையம் உள்ளிட்ட பல்வேறு அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் செயல்படுகின்றன.
இப்பகுதி, மக்களுக்காக கீழ்ஒட்டிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட வெண்குடி பகுதியில் சமுதாயக்கூடம் ஒன்று கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டன. இந்த சமுதாய கூடத்திற்கான அடிப்படை வசதிகள் இல்லாததால், தற்போது வரை இந்த சமுதாயக்கூடம் பயன்பாடின்றி கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும், கிடைப்பில் போடப்பட்டுள்ள சமுதாயக்கூடத்தை அவ்வப்பொழுது கட்டுமான இடுபொருட்கள் வைக்கும் இடமாக தற்போது மாறி உள்ளதாக, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, கிராம மக்கள் கூறுகையில், வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழ்ஒட்டிவாக்கம் ஊராட்சியின் ஒரு அங்கமாக விளங்குவது வெண்குடி கிராமம். இக்கிராமத்தில் வசிக்கும் மக்களுக்காக சமுதாயக்கூடம் ஒன்று கட்டப்பட்ட நாளிலே இதற்கான அடிப்படை வசதிகளான சமையலறை, கழிவறை, குடிநீர் வசதி உள்ளிட்டவைகள் இல்லாததால் தற்போது சமுதாயக்கூடம் பயன்பாடின்றி கிடப்பில் போடப்பட்டுள்ள நிலையில் தற்போது கட்டுமான பொருட்கள் வைக்கும் இடமாக மாறி உள்ளது வேதனை அளிக்கிறது.
மேலும், இங்குள்ள மக்கள் மஞ்சள் நீராட்டு விழா, நிச்சயதார்த்தம், காதணி விழா என சிறு சிறு சுபநிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் எனில் பல ஆயிரங்கள் செலவழிக்க வேண்டிய நிலை உள்ளன. இதுபோன்ற நிலையில் இப்பகுதி மக்களின் வாழ்வதாரத்தை அறிந்த மாவட்ட நிர்வாகம் இங்கு சமுதாய கூடத்தை கட்டி தந்தன ஆனால் சமுதாய கூடம் தற்போது பயன்பாடின்றி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் மாவட்ட நிர்வாகம் இப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டு, இந்த சமுதாய கூடத்தை மேம்படுத்தி அதற்கான அடிப்படை வசதிகளை செய்துத்தர வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.
The post வெண்குடி கிராமத்தில் பயன்பாடின்றி கிடக்கும் சமுதாயக்கூடம்: பயன்பாட்டிற்கு கொண்டுவர கோரிக்கை appeared first on Dinakaran.