கடலூர், பிப். 20: சிதம்பரம் அருகே உள்ள வாழக்கொல்லையை சேர்ந்தவர் பூவழகன் (46). இவர் சிதம்பரம் அண்ணாமலைநகரில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருந்தாளுநராக வேலை பார்த்து வந்தார். கடந்த 12ம் தேதி இரவு கடலூர் மாவட்ட எஸ்பி அலுவலகத்துக்கு விஷம் குடித்துவிட்டு வந்த பூவழகனை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பூவழகன் உயிரிழந்தார்.
இதுகுறித்து கடலூர் புதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று பாமக மாவட்ட செயலாளர்கள் சண்.முத்துகிருஷ்ணன், செல்வமகேஷ் ஆகியோர் தலைமையில் மாவட்ட தலைவர்கள் தேவதாஸ் படையாண்டவர், தட்சிணாமூர்த்தி, மாநில மாணவரணி கோபிநாத் உள்ளிட்ட ஏராளமான பா.ம.க.வினர் மற்றும் பூவழகனின் உறவினர்கள் கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் திரண்டனர். அப்போது இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, பூவழகனின் உறவினர்கள் மற்றும் பாமகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது பூவழகனின் மனைவி கூறுகையில், எனது கணவர் எங்கள் பகுதியை சேர்ந்த இரண்டு பேரிடம் கந்து வட்டிக்கு ரூ.8 லட்சம் வாங்கி இருந்தார். அதில் ரூ.7 லட்சம் திருப்பி செலுத்திய பிறகும், மீண்டும் ரூ.8 லட்சம் தர வேண்டும் என்று கந்துவட்டி கேட்டு கொடுமைப்படுத்தினர். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரை முட்டி போட வைத்து தாக்கியுள்ளனர். அதனால் அவரது சாவுக்கு காரணமான இரண்டு பேர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். அதற்கு போலீசார், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதன்பேரில் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கடலூர் புதுநகர் போலீஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
The post விஷம் குடித்து அரசு ஊழியர் சாவு கந்து வட்டி கேட்டு கொடுமைப்படுத்திய 2 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் போலீசில் உறவினர்கள் புகார் appeared first on Dinakaran.