வாலாஜாபாத், ஜூன் 15: வாலாஜாபாத் அருகே வையாவூர் காலனியில் தொடர் வயிற்றுப்போக்கு, வாந்தியால் 2 மூதாட்டிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்கு குடிநீர் காரணமா என மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள், கிராமத்தில் ஆய்வு செய்து வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம் வையாவூர் காலனியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தை சேர்ந்தவர்கள் பெரும்பாலானோர் விவசாயம் மற்றும் கூலி வேலை செய்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு அதே பகுதியில் உள்ள 60 ஆயிரம் லிட்டர் கொண்ட 2 மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து தெரு குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.
இக்கிராமங்களை சேர்ந்த சிலருக்கு, கடந்த ஒரு வார காலமாகவே தொடர் வயிற்றுபோக்கு, வாந்தி ஏற்பட்டு, அருகாமையில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகளில் அவ்வப்பொழுது சிகிச்சை பெற்று, வீடு திரும்புவதுமாக இருந்துள்ளனர். இந்நிலையில், இக்கிராமங்களை சேர்ந்தவர்கள் சிலருக்கு, கடந்த 3 நாட்களுக்கு மேலாக வயிற்றுப்போக்கு, வாந்தி அதிகரித்து காணப்பட்டதால், காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் 2 ஆண்கள், 3 பெண்கள் என மொத்தம் 5 பேர் வாந்தி, வயிற்றுப்போக்கு காரணமாக உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேபோல், தனியார் மருத்துவமனையில் சுமார் 10க்கும் மேற்பட்டவர்கள் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், வையாவூர் காலனி எல்லையம்மன் கோயில் தெருவை சேர்ந்த அஸ்வினி (60) என்பவர், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கின் காரணமாக கடந்த 3 நாட்களுக்கு முன்பு சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில், கடந்த புதன்கிழமை மாலை உயிரிழந்திருக்கிறார். இதேபோல், அதே தெருவை சேர்ந்த சரோஜா (70) என்பவர் வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அடுத்தடுத்து 2 மூதாட்டிகள் இறந்ததால் கிராம மக்களிடையே பதற்றமும் அச்சமும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே, இக்கிராமத்தை சேர்ந்த சுமார் 20க்கும் மேற்பட்டோர் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு மருத்துவமனைகளில், அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து தகவலறிந்து காஞ்சிபுரம் மாவட்ட திட்ட இயக்குநர் ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் மற்றும் வையாவூர் ஊராட்சி நிர்வாகிகள் நேற்று காலை வையாவூருக்கு விரைந்தனர். ஒவ்வொரு தெருவாகவும், வீடு வீடாகவும் சென்று பாதிக்கப்பட்ட மக்களிடம் நலம் விசாரித்தனர். பின்னர், பொதுமக்களுக்கு தொற்றுநோய் பராவாமல் இருக்க நோய் எதிர்ப்பு சத்து மாத்திரை, மருந்துகளை வழங்கி, தண்ணீரை காய்ச்சி குடிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர். மேலும், வையாவூர் காலனியில் உள்ள 8 தெருக்களிலும் பிளீச்சிங் பவுடர் தெளித்தனர். பின்னர், அப்பகுதியில் உள்ள 2 மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்து விநியோகிக்கப்படும் தண்ணீரை மாதிரி எடுத்து பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தனர். அதற்கு பிறகு 2 தொட்டிகளிலும் உள்ள தண்ணீரை வெளியேற்றி சுத்தம் செய்து புதிதாக தண்ணீர் நிரப்பினர். தொடர்ந்து வீடுகளில் உள்ள தண்ணீரையும் மாதிரிக்காக எடுத்தனர்.
அடுத்தடுத்து 2 மூதாட்டிகள் இறந்த சம்பவத்தால் கிராம மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர். மேலும், இச்சம்பவம் அருகிலுள்ள கிராம மக்களுக்கும் பரவியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி காரணமாக ஒரே கிராமத்தில் பலர் சிகிச்சைக்காக வந்து செல்கிறார்கள் என்றால் ஆரம்ப சுகாதார நிலைய அதிகாரிகள் அவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். 2 பேர் இறந்த நிலையில்தான் தற்போது மாவட்ட சுகாதார அதிகாரிகள் கிராமத்துக்கு வருகிறார்கள். உடனடியாக நடவடிக்கை எடுத்திருந்தால் 2 உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இந்த விவகாரத்தில் தீவிரமாக செயல்பட்டு நோய் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
2 பேர் சஸ்பென்ட்
வையாவூர் ஊராட்சி செயலாளர் பாஸ்கர் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரிக்கும் பணியில் இருந்த பாண்டியன் உள்ளிட்ட இருவரும், ஊராட்சியின் பணிகளை சரிவர கவனிக்காத காரணத்தால் அவர்களை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் நேற்று சஸ்பென்ட் செய்து உத்தரவிட்டார்.
எம்பி, எம்எல்ஏ நேரில் சந்திப்பு
வையாவூர் ஊராட்சியில் காஞ்சிபுரம் எம்பி செல்வம், எம்எல்ஏ எழிலரசன் ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர். அப்போது, அப்பகுதி மக்களுக்கு குடிநீரை காய்ச்சி வடிகட்டி குடிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். காஞ்சிபுரம் அருகே வையாவூர் ஊராட்சியில் குடிநீருடன் மழைநீர் கலந்ததால் அப்பகுதியை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டு 2 மூதாட்டிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்த காஞ்சிபுரம் எம்பி க.செல்வம், காஞ்சிபுரம் எம்எல்ஏ ஏழிலரசன் ஆகியோர் வையாவூர் ஊராட்சிக்கு நேரில் சென்று, அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறினர். பின்னர் குடிநீர் கிணறு மற்றும் கழிவுநீர் கால்வாய்கள் மற்றும் அப்பகுதி மக்களுக்காக போடப்பட்டுள்ள மருத்துவ முகாமையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கிராமம் முழுவதும் தூய்மைப்படுத்தி போதிய மருந்து குளோரின் பவுடர் போடப்பட்டுள்ளதா என்பது குறித்து கேட்டறிந்தனர். இந்நிகழ்வின்போது, காஞ்சிபுரம் கோட்டாட்சியர் கலைவாணி, மாவட்ட திட்ட இயக்குனர் ஜெயக்குமார், ஒன்றிய குழு தலைவர் தேவேந்திரன், ஒன்றிய செயலாளர் பாபு, ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிலட்சுமி நீலகண்டன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
சுகாதார பணிகள் தீவிரம்
தொடர் வயிற்றுப்போக்கு, வாந்தியால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருவதால் வையாவூர் காலனி பகுதியில், முத்தியால்பேட்டை, வையாவூர் உள்ளிட்ட ஊராட்சிகளை சார்ந்த 50க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் தெருக்கள் முழுவதும் பிளீச்சிங் பவுடர் உள்ளிட்ட சுகாதார பணியை மேற்கொண்டனர்.
The post வாலாஜாபாத் அருகே பரபரப்பு தொடர் வயிற்றுப்போக்கு, வாந்திக்கு 2 மூதாட்டிகள் பரிதாபமாக உயிரிழப்பு: 20க்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை குடிநீர் காரணமா என சுகாதாரத்துறையினர் ஆய்வு appeared first on Dinakaran.