காஞ்சிபுரம், நவ.15: சென்னை அரசு மருத்துவமனை வளாகத்தில், புற்றுநோய் மருத்துவரை தாக்கியதை கண்டித்து, காஞ்சிபுரத்தில் மருத்துவர்கள் அடையாள பணி புறக்கணிப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை, தாயாருக்கு முறையான சிகிச்சை அளிக்கவில்லை என மகன் கத்தியால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தை கண்டித்து அரசியல் கட்சிகள் மற்றும் அரசு மற்றும் மருத்துவ சங்கங்கள் கடும் கண்டனம் தெரிவித்து, மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்புகள் அளிக்க வேண்டும் என அரசிற்கு கோரிக்கை வைத்தது.
இதனைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் புற நோயாளிகளுக்கான சேவை பிரிவை புறக்கணிப்பதாகவும், அவசர சிகிச்சைகள் மற்றும் உள் நோயாளிகளின் சேவையை ஈடுபட உள்ளதாகவும் மருத்துவ சங்கங்கள் அறிவித்திருந்தது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், நேற்று காலை 8 மணி முதல் புற நோயாளிகள் பிரிவில் ஏராளமான நோயாளிகள் காத்திருக்கும் நிலையில், மருத்துவர்கள் சேவையினை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதேநேரத்தில், உள் நோயாளிகள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவு நோயாளிகளுக்கு உடனடியாக மருத்துவ சேவை வழங்கப்பட்டு வருகிறது. இப்போராட்டத்தின் காரணமாக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 10க்கும் மேற்பட்ட போலீசார், பல்வேறு பகுதிகள் மற்றும் நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும், 12 மணியளவில் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய மருத்துவர் சங்க காஞ்சிபுரம் கிளை தலைவர் மனோகர் தலைமை தாங்கினார். இதில், செயலாளர் தன்யகுமார், பொருளாளர் ஞானகணேஷ், நிர்வாகிகள் விக்டோரியா, அன்புச்செல்வன், ரவி உள்ளிட்ட சுமார் 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் கலந்துகொண்டனர். இதனிடையே, இந்திய மருத்துவ கழகம் காஞ்சிபுரம் கிளையும், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கமும் இணைந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மருத்துவ கழக தலைவர் மனோகரன் தலைமை வகித்தார்.
செயலாளர் தன்யக் குமார், இணை செயலாளர் முத்துக்குரமன், மத்திய குழு உறுப்பினர் அன்புச்செல்வன், மாநிலக் குழு உறுப்பினர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், கழகத்தின் பெண் மருத்துவர்கள் பிரிவின் செயலாளர் காஞ்சனா, மூத்த மருத்துவர் ஜீவானந்தம் மற்றும் மருத்துவர்கள், தாக்குதலுக்கு உள்ளான மருத்துவர் பாலாஜிக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். மருத்துவரை தாக்கிய நபருக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தர வேண்டும். மருத்துவர்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கவும், மத்திய அரசு மருத்துவர்களுக்கென பாதுகாப்புக்காக சட்டம் இயற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல், செங்கல்பட்டு அரசு மருத்துவமணையில் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
The post மருத்துவரை தாக்கியதை கண்டித்து காஞ்சியில் மருத்துவர்கள் பணி புறக்கணிப்பு ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.