நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

காஞ்சிபுரம், நவ.14: காஞ்சிபுரத்தில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதில், படித்து முடித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பங்கேற்று பயன்பெறலாம் என்று கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசால் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் மூலம் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் மாதந்தோறும் இரண்டாவது அல்லது மூன்றாவது வெள்ளிக்கிழமை (அரசு விடுமுறை நாள் தவிர்த்து) அன்று சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களும், ஆண்டிற்கு இரண்டு பெரிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த ஆணையிடப்பட்டுள்ளது.

இதனைதொடர்ந்து, படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில், காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (15ம் தேதி) வெள்ளிக்கிழமை அன்று நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இம்முகாமில், தனியார் நிறுவனங்கள் கலந்துகொண்டு 1000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கான நேர்முக தேர்வினை நடத்த உள்ளனர்.

அதுசமயம் பட்டதாரிகள், டிப்ளமோ, ஐடிஐ, 12வது மற்றும் 10ம் வகுப்பு படித்தவர்கள், பிஎஸ்சி மற்றும் டிப்ளமோ நர்சிங் படித்தவர்கள் (முன்அனுபவம் பெற்றவர்களும்) போன்றவர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். எனவே, 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் தங்களுடைய கல்வி சான்றிதழ்கள், பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்துடன் நாளை (15ம்தேதி) காலை 9.30 மணிக்கு காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 044-2723 7124 என்ற எண்ணை தொடர்புகொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் appeared first on Dinakaran.

Related Stories: