சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 20 தொகுதியில் பாஜ போட்டியிட முடிவு செய்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலை சந்திக்கும் வகையில் பாஜ தேசிய தலைவர் அமித்ஷா ஒவ்வொரு மாநிலமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை அவர் சென்னை வந்தார். பாஜ முக்கிய நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது, நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் அடுத்த கட்டமாக என்ன நடவடிக்கை எடுக்கலாம், மக்களின் வாக்குகளை எப்படி கவருவது என்பது உள்ளிட்ட முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் யாருடன் கூட்டணி அமைக்கலாம் என்பது குறித்தும் அவர் முக்கிய ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் பாஜ இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலையை உருவாக்க வேண்டும். மேலும் ஊழல் இல்லாத கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக ரஜினியை கூட்டணியில் இழுக்க முடிவு செய்துள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள 39 தொகுதியில் 20 தொகுதிகளை குறிவைத்து வேட்பாளரை களம் இறக்க முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
அதாவது கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, ராமநாதபுரம், தென்காசி, விருதுநகர், திருச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, வேலூர், அரக்கோணம், கிருஷ்ணகிரி, மத்திய சென்னை, தென்சென்னை், பெரும்புதூர், திருவள்ளூர், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி ஆகிய 20 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளது. இதற்காக ஒவ்வொரு தொகுதிக்கும் அமைப்பாளர், பொறுப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளனர். தொகுதிக்கு சம்பந்தப்பட்டவர் அமைப்பாளராகவும், ெதாகுதிக்கு வெளியே இருந்து பொறுப்பாளரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தொகுதியில் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். மேலும் கூட்டணி ஏற்பட்டாலும் இந்த தொகுதியிலேயே போட்டியிட பாஜ முடிவு செய்துள்ளதாக பாஜ வட்டாரங்கள் கூறுகின்றன.
தமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்!