வந்தவாசி அருகே வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பியபோது டயர் வெடித்து பஸ் தீப்பிடித்தது; காஞ்சியை சேர்ந்த 55 பேர் தப்பினர்: கண்ணாடியை உடைத்து மீட்ட லாரி டிரைவர்

வந்தவாசி: வந்தவாசி அருகே டயர் வெடித்ததால் மழைநீர் கால்வாய் தடுப்பு சுவர் மீது மோதிய தனியார் சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்தது. இதில் சிக்கிய 55 பேரை பஸ்சின் கண்ணாடிகளை உடைத்து லாரி டிரைவர் காப்பாற்றியுள்ளார்.செங்கல்பட்டு மாவட்டம் பெரியகாயம்பாக்கத்தை சேர்ந்தவர் செங்கோட்டையன் மகன் வெங்கடேசன். இவருக்கும், காஞ்சிபுரம் மாவட்டம் ஓரிக்கையை சேர்ந்த கோபி மகள் வேதவள்ளிக்கும் அச்சிறுப்பாக்கத்தில் இன்று காலை திருமணம் நடந்தது. நேற்றிரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் காஞ்சிபுரத்தை சேர்ந்த மணமகளின் உறவினர்கள், நண்பர்கள் 40 பேர் கலந்து கொண்டனர். மீண்டும் அவர்கள் திருமண வீட்டார் ஏற்பாடு செய்திருந்த சுற்றுலா பஸ்சில் காஞ்சிபுரத்துக்கு புறப்பட்டனர். அச்சிறுப்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மேல்மா என்ற இடத்தை இரவு சுமார் 10 மணியளவில் கடந்தபோது பஸ்சின் வலதுபுற டயர் திடீரென வெடித்தது. சாலையோர மழைநீர் கால்வாய் தடுப்பு சுவர் மீது மோதி பஸ் தீப்பிடித்தது. தீ மளமளவென எரிய ஆரம்பித்தது. பஸ் முழுமையான குளிர்சாதன வசதி கொண்டதாகவும், மூடப்பட்ட கண்ணாடிகள் கொண்டதாகவும் இருந்ததால் பயணிகள் வெளியே வர முடியாமல் அலறினர்.அப்போது சென்னை நோக்கி அவ்வழியாக வந்த லாரி டிரைவர், இதை பார்த்து உடனடியாக லாரியில் இருந்த ஒரு இரும்பு ராடால் பஸ்சின் கண்ணாடிகளை உடைத்தார். பஸ்சில் இருந்த அனைவரும் பாதுகாப்பாக  வெளியே வந்தனர். பயணிகள் இறங்கிய சில நொடியில் பஸ் முழுமையாக தீப்பிடித்து  கொழுந்துவிட்டு எரிந்தது. இதில் 4 பேருக்கு காயம் ஏற்பட்டது. உடனடியாக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.இதற்கிடையில் தகவலறிந்து வந்தவாசி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்து பஸ்சில் பரவிய தீயை அணைத்தனர். ஆனாலும் பஸ் முழுமையாக தீயில் எரிந்து சேதமானது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

The post வந்தவாசி அருகே வரவேற்பு நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பியபோது டயர் வெடித்து பஸ் தீப்பிடித்தது; காஞ்சியை சேர்ந்த 55 பேர் தப்பினர்: கண்ணாடியை உடைத்து மீட்ட லாரி டிரைவர் appeared first on Dinakaran.

Related Stories: